ஞாயிறு, 9 அக்டோபர், 2016

அண்ணாங்காலும், தளையலும்...


பொருள் அல்லது அறிவியல்வயிற் பிரிதலின் பொருட்டு உலகின் எங்கோவொரு மூலையில் இருந்துக்கொண்டிருந்தாலும், பிறந்தவூரை, பெற்றவர்களை, உற்றவர்களை, என்னை உடனிருந்துக் காத்தக் கால்நடைகளையும் நினைத்துக்கொண்டேதான் என் ஒவ்வொருப் பொழுதுகளும் நிறைவடைகின்றன. அப்பாவை நினைக்கின்றபோது அவருடையத் தலையை விட்டு அவர்தன் இறுதிநாள் வரை நீங்காதச் சுங்கம் வைத்துக் கட்டியிருக்கும் உருமாலையும், அதிகாலையில் என்னை எழுப்பிவிட்டுக் கீழ்வானில் தோன்றும் வெள்ளி விண்மீனைக் காட்டி, “இதுதான்  உழைக்கோல் மீன் !! இது கெழக்க கெளம்பி மேலவந்து மின்றதுக்கு மிந்தியே எந்திரிச்சுக் கட்டுத்தாரயில இருக்கறச் சாணி சப்பெல்லாம் வழிச்சு எறிஞ்சிட்டு, பண்டம் பாடீகளுக்குத் தீவனம் போட்டுரோணும்!!” என்னும் கடமை தவறாதே என்றென்னைக் கண்டிக்கும் சொற்கள் மட்டும் அப்பாவை நினைவூட்டுவதில்லை.






மாட்டுச்சாளையின் மேல் முகட்டில் அப்பா சொருகிவைத்திருக்கும் மாடு மிரட்டும் உழைக்கோல் தடியும், எரவாரத்தில் கட்டித் தொங்கிக்கொண்டிருக்கும் மேழிபூட்டியக் கலப்பை, நுகத்தடி, சாணி வழிப்பதற்காக மரத்தூணொன்றில் கவிழ்த்து வைத்திருக்கும் குறக்கூடை, சாணியள்ளியவுடன் கூட்டிச் சுத்தம் செய்யவென்று கட்டைதட்டிய விளக்குமாறு,  பால் கறவையின்போதுக்  கறவைகளின் பின்னங்கால்களில் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் அணை-கயிறுகள், ஆட்டுக்குட்டிகள், எருமை மற்றும் மாட்டின் கன்றுகளைக் கட்டும்போது அவைகளின் கழுத்துக்கு, மேனிக்குப் புண்படாமல் மெலிதாக இருக்கவேண்டுமே என்பதற்காகக் கடைகளில் விற்கப்படும் நார்கயிறுகளை வாங்காமல் தையல்கடைக் கழிவுத்துணிகளை முன்னமேச் சொல்லிவைத்து வாங்கிவந்து நிலாவெளிச்சத்தில் வாசலில் கால்நீட்டி உட்கார்ந்துக்கொண்டுத் தன் தொடையின் மீது உருட்டித் திரித்தத் துணிக்கயிறுகள், கழுத்துத்தும்புகள், தும்புகளைக் கயிறுகளோடு பிணையப் பயன்படும் பித்தளைத் திருகாணிகள், இளங்கன்றுகளின், ஆட்டுக்குட்டிகளின் சிவந்துகிடக்கும் தொப்புள்கொடியைக் காகம் மற்றும் பருந்துகளின் பார்வையிலிருந்து மறைக்கவென்றுத் தைக்கப்பட்டுக் குட்டிகளின் தொப்புள்கொடியை மறைத்து நடுமுதுகுவரைக் கொண்டுசென்று முடிச்சிடும் வண்ணம் கச்சைகளோடுக் கூடியத் துணிப்பைகள், பாலூட்டும் கன்றுகள், பச்சைமேய்ந்துப் பழகும்முன்னம் கட்டுத்தாரை மண்ணைத் தின்றுவிட வாய்ப்பிருப்பதால், அவைகளுக்கு நார்க்கயிற்றில் பின்னப்பட்ட வாய்க்கூடைகள், என்று எல்லாவற்றையும்தான் நினைத்துக்கொள்வேன்.  



நான் ஊருக்கு வரும் ஒவ்வொரு முறையும் கண்ணாறக் கண்டு, மெய்யாறத் தழுவி, வாயாற மொழிய விரும்புவது எம் உறவுகளோடு மட்டுமல்ல. நாங்கள் வளர்க்கும் பண்டம் பாடிகள் எனப்படும் கால்நடைகளோடும், நாய்களோடும் தான். அவைகளும் எங்களின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினர்தான். பண்டம் பாடிகளைப் பெரும்பாலும் காட்டுக்குள் கட்டித் தீவனமிட்டோ அல்லது மேய்த்தோக் கொண்டிருப்பார் அம்மா. அவைகளைக் காண்கின்றப் போதினில் ஏதோவொன்றை இழந்தவனைப்போல எனக்குள்ளே எண்ணிக்கொள்வதுண்டு. இந்த எண்ணம் அவைகளை நான் அருகிருந்துப் பார்த்துக்கொள்வதில்லை என்றக் குற்றவுணர்வால் ஏற்படுகிறது என்பதையும் உணர்வேன். அதனால் மாடுகளை, ஆடுகளை, கன்றுகளை, கிடாரிகளை, கிடாய்களை என்று எல்லாப் பண்டம் பாடிகளையும் ஒருமுறையாவது ஆசைத்தீர நீவிக்கொடுத்து என்னை நானே ஆற்றுப்படுத்திக்கொள்வதுண்டு.  


பண்டம்பாடிகளின் கழுத்துச் சப்பையினருகில் நீவிக்கொடுத்துக்கொண்டே, கொம்புகளுக்கு இடையே இருக்கும் குப்பைக்கூளத்தை நம் விரல்களால் கீறி நீக்கிவிட்டு, ஆங்காங்கு பறக்கும் தெனாசுகளைப் பிடித்துத் தலையைக்கிள்ளிக் கொன்றும், கால்நடைகளின் காதுமடல்களில் ஒட்டிக்கொண்டு அவற்றின் கால்படி உதிரத்தை உறிஞ்சிஉண்டுப் படுத்திருக்கும் உண்ணிகளைத் தேடிப்பிடித்துப் பிடுங்கியெடுத்து மீண்டுவராதவாறு அருகில் இருக்கும் பாறைக்கல்லின் மீதோ அல்லது எரியும் தீயினுள்ளோ வீசிவிடுவதுண்டு. நம் தலைநீவலுக்கும், நம் நகக்கீறலுக்கும் சொக்கிப்போய் அவைகள் மேலும் நீவச்சொல்லித் தம் தலையை அருகே கொண்டுவந்துக்காட்டியும், நன்றியோடு நம்மை நாவால் நக்கியும் அன்பையும் திருப்பிக் கொடுக்கும் சமயத்துக்காகவே உழவன் தன் வாழ்நாளையேக் கொடுக்கிறானோ என்று எண்ணத்தோன்றும்.

ஊரில் இருக்கின்ற வெகுசில நாட்களில் காலை எழுந்தவுடன் என்னையறியாமல் கால்கள் மாடுகள் கட்டியிருந்தக் கட்டுத்தாரை நோக்கிப் போகும். முதலில் சாணியை அள்ளிக் குப்பைக்குழியில் வீசிவிட்டு, தென்னம்பூம்பாளைக் கொண்டு கழிசல் தீவனத்தட்டுகள், கால்நடைகளின் சிறுநீரில் நனைந்த வைக்கோல் சிதறல்கள்,   ஆட்டாம் புழுக்கை, இன்னபிறக் குப்பைக்கூளங்கள் என்று எல்லாவற்றையும் கூட்டியள்ளி,  கொழித்த வாய்க்கால் மணலோ, கிணற்றுமேட்டிலிருந்துச் சல்லிமண்ணோச் சாணம் சுமந்தக் குறக்கூடையில் கொண்டுவந்து கட்டுத்தாரையின் ஈரம் உலர்த்தக்கொட்டி நிரவிவிட்டுச் சுத்தம் நிறைந்த அந்த இடத்தைப் பார்க்கும்போது வரும் பாருங்கள் ஒரு செருக்கு.. அந்த அகமகிழ்வை இங்கே என்னால் சொற்களில் வடித்துவிடஏலாது. எத்தனை அவசரமான வேலைக்குக் காலையில் புறப்பட்டாலும், புறப்படும் முன்பேக் கட்டுத்தாரைச் சாணியை வழித்து எறிந்துவிட்டுச் சென்றால்தான் செல்லும் வேலைச் செம்மையாகும் என்று இங்கே எல்லோருக்கும் நம்பிக்கையுண்டு. நானும் அதை மனதார நம்புகிறேன்.

எனக்கு விவரம் தெரிந்த நாட்கள் முதல் எங்கள் தோட்டத்தில் குறைந்தது ஒரு எருமையாவது இருக்கும். பள்ளி முடிந்து வந்தப்பின்பு வரப்புகளில் அவைகளைக் கையில் பிடித்துக்கொண்டு மேய்க்கவேண்டும். இதுபோலக் கைகளில் பிடித்தபடி மாடுகளை மேய்ப்பது, எருமைகளை மேய்ப்பதைவிட சற்று எளிது. மாடுகள் சற்று மிரளக்கூடியவை. ஆகவே, அவைகள் வெள்ளாமைகளில் வாய்வைக்க எத்தனிக்கும்போது “ஹேஏய்...” ஒரு சின்ன மிரட்டல் சத்தம் போதும், உடனே ஒன்றுமேத் தெரியாத அப்பாவிபோல  வறப்பைநோக்கித் திரும்பிக்கொள்ளும். ஆனால் எருமைகள் அப்படியல்ல. பெரும்பாலும் பயிரை நோக்கியேக் கண்ணை வைத்துக்கொண்டு நாம் எப்போது ஏமாறுவோம் என்றுப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு வெடுக்கென ஆளுயரப் பயிரை அடியோடுப் பிடுங்கி மென்றுவிடும். அதற்குள் நாம் தெளிந்து இடி இடிப்பதைப்போல “ஹேஏய்.. யூக்காலி எருமயப் பாரு??!! பயிரக் கடிக்கோணும்னே வரப்புல மேயிதாட்ட..” கத்திவிட்டு மூக்கணாங்கயிறைப் பற்றி இழுத்தாலும் மிக மெதுவாகத் தம் கண்களை திருதிருவென நம்மைப் பார்த்துவிழித்தபடி வரப்பு நோக்கித் திரும்பும்.


எருமை மேய்த்தலில் ஒரு நன்மையும் உண்டு, அது அம்மாவின் தலைத் தெரியும்வரை வரப்பில் நடந்துக்கொண்டேயும், பயிர்களின் அடர்த்தியில் அம்மாவின் கண்களிலிருந்து மறையத்தொடங்கும்போது எருமையின் முதுகில் ஏறி உட்கார்ந்துச் சவாரிச் செய்துகொண்டே மேய்க்கலாம். எருமை மீது ஏறி இறங்கியதை அம்மா எளிதில் கண்டுபிடித்துவிடுவார். காரணம் எருமைத் தோலில் இருக்கும் செதில் போன்ற அழுக்கு நம் டவுசரின் பின்பக்கம் முழுதும் ஆகிவிடும். என்னதான் துடைத்துவிட்டு ஏறி உட்கார்ந்தாலும் கெரகம் டவுசர்ல கறையேன்னுப் புடிச்சுக்கும். எங்கள் வயதொத்தச் சிறுவர்கள், பள்ளிவிட்டு வந்தவுடன் கட்டாயம் பொழுதுசாயும் வரை வறப்புகளில் கைகளில் பிடித்துக்கொண்டு மாடுமேய்த்தே ஆகவேண்டும் என்பது எங்களின் குடும்பங்களில் எழுதாக்கிளவி. இ்தை நாங்கள் மீறியதுமில்லை. மீறத்துணிந்ததுமில்லை.
அதேசமயம் வாரஇறுதி நாட்கள் என்றால் கையில் பிடிப்பதை விடுத்துக் கோரைக்காடுகளில், வேலிகளில், பள்ளங்களில், குளத்து மேடுகளில், கரும்பு வெட்டிய கரைவழிகளில், கருக்கருவாள் கொண்டு நிலந்தொட்டு அறுத்த நெல்லங்காடுகளில், கூர்கூராகத் தலைநீட்டும் சோளக்கட்டைகள் காலில் ஏறிவிடாதவாறு வார்செருப்புப் போட்டுக்கொண்டுச் சோளக்காடுகளில், ஆனைக்கோரை மேவி நிற்கும் குளத்தங்கொரைகளில், ஊனாங்கொடி, வள்ளக்கொடி, நாணல், சேம்பு, தண்ணித்தழை, சிறுசுண்டை, கெழுச்சி, கரையாம்பூடு, பூலாம்பொதரு என்று பச்சைச் செழித்துக்கிடக்கும் ஆத்துமேடுகளில் பண்டம்-பாடிகளுக்கு "அண்ணாங்காலும்-தளையலும்" போட்டுவிட்டு அவற்றை மேய்ப்பதுண்டு.


அதென்ன அண்ணாங்கால்-தளையல்? “அண்ணாந்து” என்ற சொல்லுக்கு மேல்நோக்கி நிமிர்ந்துப் பார்த்தல் என்று பொருளுண்டு. ‘அண்ணா’ ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்றுத் தமிழ்வல்லார் செப்புவர். "நின்அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ணின் சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்" என்று அண்ணாந்து என்றச் சொல்லை “மிகுந்தச் செருக்கு” என்றப்பொருளில் நற்றிணை ஆளுகிறது. கொங்குவழக்காறுகளில்  “அண்ணாங்கால்” என்றச்சொல்லுக்குக் கால்நடைகளை அண்ணாந்துப் பார்க்கவியலாமல் கால்களோடுக் கழுத்தையும் சேர்த்துக்கட்டிவிடுதல் என்றுப்பொருள். அண்ணாங்கால் போட்டுவிடுதலால் கால்நடைகள் மேய்ந்து முடிக்கும்வரை மேல்நோக்கிப் பார்க்கவியலாது. அதோடு ஒருக்குறிப்பிட்ட எல்லைக்குள் மேய்க்கவேண்டியக் கட்டாயம் இருப்பதாலும், அருகே இருக்கும் வெள்ளாமைக் காடுகளுக்குப் பாதுகாப்புக்காகவும் இந்த அண்ணாங்கால் மாடுகளுக்குப் போடப்படுகிறது. பண்டம் பாடிகளின் அகவைக்கேற்ப கயிறுகள் உண்டு. பிறந்தகன்றுகளுக்குக் கழுத்துப் புண்படாதவாறு இரும்பு அல்லதுப் பித்தளைத் திருகிணியில் கோர்க்கப்பட்டப் பருத்திப் பஞ்சு அல்லது துணியால் திரிக்கப்பட்டத் தும்பும், இளங்காளை அல்லது கிடாரிகளுக்கு நூலால் திரிக்கப்பட்ட முகறைக்கயிறும், அதற்கும் மேற்பட்ட அகவையுடைய மாடுகள், காளைகள் மற்றும் எருதுகளுக்கு மூக்கணாங்கயிறும் உண்டு.

மாடுகளுக்குக் கொம்புகளைச் சுற்றிக்கட்ட நூலாலானத் தலைக்கயிறு, கழுத்தில் மணி அல்லது சலங்கை கோர்த்த கழுத்துக்கயிறு, எருமைகளுக்கு வலம்புரிச்சங்குகள் கோர்த்த மயிர்க்கயிறு, சவாரி வண்டிகளில் பூட்டப்படும் காளைகளுக்குக் குஞ்சம் வைத்தத் தலைக்கயிறு, கழுத்துக்கயிறு, கொம்புகளுக்குத் தங்கநிறத்தாலானப் பித்தளைப்பூண்கள்,  கால்களுக்குத் தண்டைகள் என்றுச்சூட்டப்பட்டு இட்டேரிகள், ஊர்வீதிகள் என்று வலம் வரும் கொங்குநாட்டுக் கால்நடைகளைக் காணக் கண்கள் இரண்டு போதா. திமிரும் கால்நடைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே இந்த மூக்கணாங்கயிறு. ஆயினும் மிகப்பாதுகாப்பாக மூக்கணாங்கயிற்றைக் கையாளவில்லையென்றால் மாட்டின் மூக்கில் புண் ஏற்படலாம். ஏன் மூக்கே அறுந்துகூடப் போகலாம். ஆனால் பண்டம்பாடிகள் வெள்ளாமைக் காட்டினில்  முளைத்த அல்லது விளைந்த பயிரில் வாய்வைத்தபோது வேகமாக மூக்கணாங்கயிற்றை இழுத்து மாட்டுக்கு மூக்கறுந்துவிட்டது என்பது நாங்கள் கேள்விப்படாத நிகழ்வு. “நெனவு கெட்டவ நானு...ஒரு நிமிசம் ஏமாந்திட்டேன்.. ஒருசெறகுச் சோளப்பயிரத் தின்னுப்போட்டுது..எரும.” என்றுத் தம்மைத்தாமே நொந்துக்கொள்வார்களேயொழிய மாடுகளுக்குத் தண்டனைத் தரமாட்டார்கள். “வாயில்லாச்சீவன் அதுக்கு என்னத்தெரியிம்?!!” என்பார்கள்.
ஆகவே மூக்கணாங்கயிற்றை நேரடியாகக் கைக்கயிற்றில் இணைக்காமல், கழுத்துக்கயிற்றோடுச் சேர்த்துத்தான் இணைத்திருப்பார்கள். நாம் வேகமாக இழுத்தாலும் கழுத்துக்கயிற்றோடுப் பிணைத்து இருப்பதால், அவைகளின் மூக்குக்கு எந்தத் தீங்கும் நேராது. அண்ணாங்கால் போடும்போதும், நீளமாக இருக்கும் கைக்கயிற்றைக் கழுத்துக்கயிறோடுச் சுற்றிக் கொணர்ந்து முடிச்சொன்றை முடிந்துப் பின்னர் மாட்டின் வலதுகாலில் குளம்புக்குச் சற்றுமேலே இரண்டு உருவாஞ்சுற்றுகள் சுற்றி மீதமிருக்கும் கைக்கயிற்றின் நுனிப்பகுதியால் இடதுகாலையும் நடக்குமளவுக் கட்டித்தளைத்து மேய்ச்சலுக்கு விடுதல்தான் “தளையல்” என்பார்கள். அதாவது அவைகள் மேய்ந்து முடிக்கும்வரை மேல்நோக்கிப் பார்க்காமல், மேய்நிலத்தை மட்டும் பார்க்க அண்ணாங்காலும், சிறு எல்லைக்குள் மேயும்போது மெதுவாக நகர்ந்துபோகத் தளையலும் போடப்படுகின்றன. புற்கள் நிறைந்தவிடத்தில் கால்நடைகள் காதுமடல்களை அசைத்தபடி, கண்களில் பசுமைமின்ன, வெறுக்வெறுக் என்றுப் பச்சையை மேய்வதைப் பார்க்கப்பார்க்க ஆசையாக இருக்குமெனக்கு. பொழுதுவிழும் நேரத்தில் மாட்டுக்கு வயிறு நம்பியிருந்தால்தான் நமக்குத் தூக்கமே வரும். இன்னும் சொல்லப்போனால்  பண்டம் பாடிகளுக்கு வயிறு நெறஞ்சாத்தான் அன்னக்கி நாங்க உங்கற சோறு எங்க ஒடல்ல ஒட்டும்.


என் பால்யவயதுகளில் நான்கண்ட, பில்லாம்பூச்சி என்று உருண்டு விளையாடி மகிழ்ந்த, வெங்காயக்காடுக் களையெடுக்கப் பயன்படும் சிறுகொத்துக் கொண்டுக் கோரைக்கிழங்குகளை அகழ்ந்தெடுத்துத் தோல்நீக்கிப் உண்டுகளித்த வரப்புகளில், பில்லாங்கொரைகளில், பண்டம்பாடிகள் மேய்ந்துச் சலித்தப் புல்வகைகளில் பெரும்பாலானவைகளை இன்றுக் காணவில்லை. கொங்குவழக்கில் “புல்”லை “பில்” என்பார்கள். அருகம்புல், அரிசிப்பில், அப்பிச்சிமீசை, ஆனையருகு, ஆனைக்கோரை, இராகிக்கருதுச் சக்களத்திப்பில், ஊசிப்பில், கணுவுப்பில், கரையாம்பில், கொழுக்கட்டாம்பில், கோரை, சம்பு, சட்டிக்கீரைப்பில், சாமக்கோரைப்பில், சாரணை, சாணிப்பூடு, சிறுகோரை, செவ்வருகு, வரிக்கிராய், வெண்ணெய்திரட்டிப்பில், வெள்ளருகு, மத்தங்காப்பில், புளிச்சான், பசிறி, தொய்யச்செடி, பண்ணைச்செடி இன்னும் பிற என்றுக் கொங்குநாட்டு மேய்ச்சல் நிலங்களில் புற்களும், செடிகளும் நூற்றுக்கணக்கில் உண்டு. பொழுதன்னைக்கும் மேய்ந்துவிட்டு வந்து வயிறுநிறையத் தவிட்டுத்தாழியில் கண்வரைக்கும் முக்குளிபோட்டுத் தவிடும், தேங்காய், கடலைப்புண்ணாக்கு தின்னும் காட்சியைக் காணும்போதில் எங்குமில்லாத நிம்மதி நம் மனத்துக்கு வந்துசேரும்.


பெற்றோர் தாம்பெற்ற மக்களுக்கு உப்பு, மிளகாய் கொண்டு சுற்றிக் கண்ணேறுக் கழிப்பதைப் போலவேக் கால்நடைகளுக்கும் கண்ணேறுக் கழிக்கின்ற வழக்கமும் இங்கே உண்டு. எவரேனும் ஐயப்படும்படி நம் வீட்டிற்கு வந்துவிட்டுச் சென்றநாளில் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டால், வந்துச் சென்றவரின் காலடித்தாரை மண்ணை எடுத்துவந்து உப்பு, மிளகாயுடன் சேர்த்து கால்நடையைச் சுற்றித் தீயில் எறிவதும், மடியில் புண்ணானால் பார்வைக்கொப்பளம் என்றும், அதற்கு அப்பக்கோவை இலையை அரைத்துப் பூசிவிட்டபின், வீட்டிற்குமுன் உலக்கையைத் தென்வடலாகக் கிடத்தி நோய்வாய்ப்பட்ட கால்நடையைக் கிழமேலாக மும்முறைத் தாண்டவைப்பதும் மரபு. இந்த வழக்கங்களும், மரபுகளும், மாடு மேய்த்தலும் எல்லாம் நம் பெரியவர்கள் உள்ளவரை இன்னும் சிறிதுகாலம் தான் இருக்கும் என்றே அஞ்சுகிறேன். இப்போதே நான் சிறுவயதில் கண்ட புல்வகைகள் பெரும்பாலானவைகளைக் காணவியலவில்லை. வெள்ளாமைக்காடுகள் முழுமைக்கும் களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள், நச்சு உரங்கள் என்று எல்லாமும் நம் மண்ணைப் பசும்புல் கூடத் தலைகாட்ட முடியாதவாறு மலடாக்கிவிட்டன. இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு சிற்றூருக்கும்  ஒருவராவதுப் புற்றுநோயில் துன்புறுபவர் இருக்கிறார். பசுந்தீவனங்கள் கிடைக்காமல் வரத்தீவனங்களையும், பருத்தி ஆலைகளில் கழிவாகக் கொட்டப்படும் கழிவுப்பஞ்சுகள், பாலுற்பத்தியைத் தூண்டும் புரதங்களடங்கிய ஆலைத்தீவனத்துக்கு என்று ஆலாய்ப்பறக்கும் வகையில் வாயில்லாப்  பண்டம்பாடிகளைத் தீவன அடிமைகளாக்கிவிட்டோம். பொழுது உச்சிக்கு ஏறும்வரையில் கட்டாந்தரைகளில் கட்டிவைத்திருந்து, மூன்றுகுடம் தண்ணீரில் இரண்டுகிலோ ஆலைத்தீவனத்தைக் கலந்துக்கொடுத்துத்தான்  அன்றாடம் அவற்றின் உதிரத்தைப் பாலாகக்கறக்கிறோம். அதைப் பாலென்றுச் சொல்லி நம் பிள்ளைகட்குக் கொடுத்து உடம்பெல்லாம் நச்சு வளர்க்கிறோம்.       இனித் தீவன ஆலைக்காரர்களையும், ஜெர்ஸி விந்தணு வியாபாரிகளையும், பால் கறக்கும் கருவி உற்பத்தியாளர்களையும் நம்பித்தான் கால்நடைகளை வைத்திருக்கமுடியும். சிறிது சிறிதாய் நம் பசுமைக் கரையும். நாளடைவில் பாலெனும் வெண்மையில் அமிலம் நிறையும். பின்னர் மீண்டும் வெறுங்குருதியாகப் பசுமைப் போர்த்தியிருந்த மண்ணெலாம் செம்மையாய் ஓடும். அன்று நாமும் பீற்றிக்கொள்வோம்.. மாடென்ன? மனுசனென்ன? எல்லாம் ஒண்ணுதான வென்று.

முனைவர். செ. அன்புச்செல்வன்





1 கருத்து:

  1. படிக்கப் படிக்க பால்ய நினைவுகளோடு சிறுகண்ணீர் துளியும் எட்டிப்பார்க்கிறது.எத்தனை புல் வகைகள்.எங்கே போய்விட்டன எல்லாம்?மொளகாச் செடி நட்டிருக்கும் நாலஞ்சு செரவுல சுத்திலூம் அவரை,பீர்க்கை,பாவக்காய்,சொரக்காய்,தண்ணி போற வரப்புல வெண்டங்காய்,கொத்தவரைன்னு எத்தனை காய்ச்செடி நட்டிருந்தோம்!சைடுல பூசணிக்காய்!சுத்தீலும் சரலடிச்சு சைடுல பந்தல் போட்டிருக்கும். குனிஞ்சு அவரக்கா பொறிக்கோணும்,பீக்கங்காய் பொறிக்கோணும்.அப்பவும் தப்பிச்சு முத்திப் போகும் காய்கள்.அவரைப் பூக்களில் தேனெடுக்கும் சிட்டு,கூடுகட்டி குஞ்சு பொறிக்கும் பேர் தெரியா குருவிவகைகள்,ஆடு மேய்க்கையில் ஆட்டுமேல சவாரி செஞ்சு துணைக்கு வரும் ரெட்டைவால் குருவி அப்பாடா.பால்யத்தோடு போச்சு பாரம்பரியமும்

    பதிலளிநீக்கு