IT துறையும், இரவல் காதலியும்...
கடும் பணிச்சுமை காரணமாக கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னமே வாசித்துவிட்ட ‘செல்லமுத்து குப்புசாமி’ யின் "குருத்தோலை" நாவலைப் பற்றி எழுத முடியாமல் போய்விட்டது. அதைப்பற்றி எழுத எனக்கு நிறைய இருக்கிறது. விரைவில் எழுதுவேன். பெரும்பாலும் எனக்குக் கிடைக்கும் தொடரூர்திப் பயணங்களின் போதுதான் வாசிக்க ஏலுகிறது. ஆகவேக் கடந்த வாரத்தில் தொடங்கி நாளொன்றுக்குச் சராசரியாகக் (காலை-மாலை) கிடைத்த முப்பது நிமிடங்களில் வாசித்து இன்று முடித்த "இரவல் காதலி" பற்றிச் சிலவரிகள். இதை வாசித்து முடித்தத் தருணத்தில் உண்மையிலேயே எனக்கும் என் வாழ்வியலுக்கும் சற்றும் தொடர்பற்ற ஒருப் புதுவுலகத்துக்குள் போய் வந்ததைப்போல உணர்ந்தேன். வேதியியல் ஆராய்ச்சியுலகமே மிகக் கொடியது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, IT துறையையும், அதில் இருக்கும் மனிதர்களின் நடை, உடை, பாவனைகளை, என்னிடம் பன்னிரண்டாம் வகுப்பில் வேதியியல் படித்தவர்கள் இன்று IT துறையில் என்னை மிஞ்சி வாங்கும் ஊதியங்களை, அவர்கள் பயன்படுத்தும் சாதனங்களை, அவர்களுக்கு இந்தச் சமூகம் கொடுக்கும் உயர்தனி மதிப்புகளையெல்லாம் பார்த்து என்னுள் ஓடியப் பொறாமை எண்ணங்களை இங்கேச் சொன்னால் பெரும்பாலான IT துறை நட்புகள் என்னை நட்பிலிருந்துக் கழட்டி விட்டுவிடுவார்கள். ஆகவே நாவலைப்பற்றி மட்டும் பேசுகிறேன். இந்த நாவலை வாசித்தபிறகு என்னுள் இருந்த அந்தப் பழைய எண்ணங்கள் யாவும் காணாமல் போயின என்றால் அது மிகையில்லை.
குருத்தோலை நாவலில் IT துறை வேலைக்காக பெங்களூர் போகும் "ராசு" தான் இந்த நாவலில் நாயகன் "அசோக்". அசோக் என்னும் பாத்திரம் உண்மையில் செல்லமுத்து குப்புசாமியாக ஏன் இருக்கக்கூடாது என்ற கேள்வி நாவலை வாசித்து முடிக்கும்வரை என்னுள் தோன்றிக்கொண்டே இருந்தது. நாவலில் IT துறைக்கு ஆள் தேர்வு செய்யும் வழிமுறைகள் முதலாக, Programming, Coding, ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பல்வேறு படிநிலைகள், ஒவ்வொரு நிலையிலும் பணிபுரியும் பல்வேறுபட்ட மனிதர்களின் செயல்பாடுகள், அரசியல், ON-SITE, CLIENTS, அவர்களைச் சமாளிக்கும் முறைகள், இதன் பின்னே இயங்கும் பெரும் பொருளியல் வரை பொருளுலகத்துக்குள்ள அத்தனைப் பிரமாண்டங்களையும் மிக எளிதாக அதே நேரத்தில் என்னைப்போன்ற வாழைமட்டைக்குக்கூட புரியும் விதத்தில் வரிகளில் அடக்குவதென்பது தலைசிறந்தப் பொருளாதார வல்லுநரும், எழுத்தாளருமான செல்லமுத்து குப்புசாமி யால் மட்டுமே சாத்தியப்படும் என்று நினைக்கிறேன். நான் மேற்சொன்னவைகள் எல்லாமே புறத்திணை தொடர்பானவை.
இன்னும் நான் அகத்திணைப் பற்றிச்சொல்லவில்லை. நாவலின் உயிரோட்டமே அகம்தான்.... அல், பகல், உணவு, மனைவி, குழந்தை, வீடு, தந்தை, தாய், மருந்து, இயற்கை என்று எல்லாம் இருந்தும் தவிர்த்துவிட்டு உழைக்கும் IT துறையினரின் வாழ்வியலை, எந்தவொருப் பிடிப்புமின்றி வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ளும் எண்ணற்றத் திருமணமாகாத முதிரிளைஞர்களை, அவர்களின் அன்றாட வாழ்வியலை, காமத்தை, குடிப்பழக்கத்தை, திருமணம் வரை உடனிருந்த நண்பர்கள் மணமாகியபின் ஒவ்வொருவராக நீங்கும் போது ஏற்படும் நிரப்பவொண்ணா வெறுமையை என்று இந்த நாவல் பேசாப்பொருளேதும் இல்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள் இலக்கியத்தில் மட்டுமே வல்லுநராக இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கொங்குப்புற வாழ்வியல், உலகம் முதல் உள்ளூர் பொருளியல், எங்களைப் போன்றவர்களுக்கு “அப்புறத்து உலகமான” IT துறை பற்றிய அறிவு என்று பன்முகத்திறம் கொண்ட எழுத்தாளர் இவராகத்தான் இருக்கமுடியுமென்று எண்ணுகிறேன்.
இடையிடையேக் குடும்பத்தை, மனைவியை நேசிக்கச் சொல்லும்போது நம் வீட்டுப் பெரியவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். நானிருக்கும் ஆராய்ச்சித்துறையில் ஆங்காங்கு நடக்கும் வக்கிரக் காமங்களை மட்டுமேக் கேள்விப்பட்டபோதும், கண்ணாறக் கண்டபோதும், அந்தக் களியாட்டங்களில் ஈடுபடுவோர் செய்யும் நீச அரசியலில் சிக்கி வழியறியாமல் தவிப்பவர்களைச் சந்தித்தபோதும் இங்கே சொல்லமுடியாத அருவருப்புணர்வு என்னுள் உண்டாகியிருக்கிறது. ஆனால் இந்தக் கதையில் வரும் "அசோக்-காயத்ரியின்" காமம் மேலிட்டப் பொருந்தாக் காதலை, கொஞ்சுதல்களை வாசித்தபோது ஒருவித கழிவிரக்கம் தான் அவர்கள் இருவர் மேலும் தோன்றியது. உண்மையிலேயே எத்தனை “ரஞ்சித்” கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காகப் பாடுபடப் போய் குடும்பத்தை இழந்திருக்கிறார்களோ? எல்லோர் வாழ்விலும் “சுச்சீ”க்கள் கிடைப்பது அரிது... சுச்சீ வாழ்க!! தான் மேலோங்க அல்லது நிலைக்க வேண்டுமானால் எந்த எல்லைக்கும் தயக்கமின்றிப் போய் வாலாட்டும் அரிப்பெடுத்த ஸ்வப்னாக்கள் எல்லாத் துறைகளிலும் திரிவார்கள் போலிருக்கிறது. என் வாழ்விலும் ஒரு ஸ்வப்னா இருந்திருக்கிறாள். என் ஆராய்ச்சி நட்புகள் மட்டும் புரிந்துக்கொள்வார்கள்.
ஒருப் பன்னாட்டு நிறுவனத்தை நிறுவ எவர்க்கேனும் ஆசையிருந்தால் நிச்சயம் இந்த நாவலை வாசித்துவிடுங்கள்... பொருளியல் கோட்பாடுகள் முதல், இதனை இதனால் இவன் முடிப்பன் என்றாய்ந்து பார்ப்பது வரை புகுந்து விளையாடியிருக்கிறார். நிச்சயம் மென்பொருள் துறை நண்பர்கள் எல்லோருக்கும் பிடிக்கும்...உங்களுடைய வாழ்க்கையை அசைபோட வைக்கும் எண்ணற்ற நிகழ்வுகள் "இரவல் காதலி" நாவல் முழுதும் நிறைந்துக் கிடக்கின்றன... வாங்கி வாசிக்கப் (மின் புத்தகமாகவும் கிடைக்கிறது) பரிந்துரைக்கிறேன்!! எங்களின் வாழ்வியலான "குருத்தோலை" நாவல் பற்றி விரைவில் எழுதுகிறேன்...
-செ. அன்புச்செல்வன்
25-11-2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக