திங்கள், 15 டிசம்பர், 2014



கொங்கில் கூடியிருந்து குளிர்ந்தகதை-1

இன்று மார்கழி ஒன்று. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று மாதவன் சொல்வதாகக் கேட்டிருக்கிறேன். அடுத்து வருவது தை மாதம் என்பதாலும், அதுசார்ந்த கொண்டாட்டங்களுக்கு இந்த மார்கழி மாதத்திலேயே தயாராவதாலும், மார்கழியை வழிபாடுகள் நிறைந்த மாதமாகவே கொங்குப் பகுதிகளில் கருதப்படும். மார்கழி என்றாலே வீதிவரை அடிமார் போட்டுக்கூட்டி சொதம்பக் கரைத்த சாணித்தண்ணி தெளித்த வாசல்களும், அதன் நடுவில் அலர்ந்து கிடக்கும் கோலங்களும், காராம்பசுமாட்டின் சாணாங்கி எடுத்து கன்னியர் கையினால் வைத்திட்ட பிள்ளையார்களும், அந்தப் பிள்ளையார்கள் மார்கழி முப்பதில் ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும் ஒரு வகைப்பூ வீதம் (ஐந்து திணைகளைக் குறிப்பதற்காக என்று நினைக்கிறேன்) ஐந்து வகையான பூக்களைத் (அருகு, பிச்சி, அரசாணி (பூசணி), பூளை, ஆவரை) தன் சென்னிமேல் சூடிக்கொண்டு அமர்ந்திருக்கும் வாசல் நிறைந்த காட்சிகளும், கோழி கூப்பிடும் முன்னரும், அந்தி சாயும் முன்னரும் என்று இருவேளை ஒவ்வொரு வீட்டின்முன் முழங்கப்படும் சங்கொலியும், புல்லும் புதரும் அண்டிப் போகமுடியாக் காட்டுக் கோயில்களில் பதிகொண்டு இருக்கும் ஏழைத்தெய்வங்களுக்கு முப்பதுநாள் நித்தப்பூசை மணிச்சத்தங்களும், "கோலப்பொடி வாங்கிலியோவ் கோலப்பொடேய்" என்ற கோலமாவு வியாபாரிகளின் விநோதக் குரல்களும், மரமெல்லாம் நடுங்கும் மார்கழிக் குளிருக்கு இதமாய் இருக்கும் கிணற்றுத் தண்ணீரும், ஊர் தோறும் இசைவளர்க்க உருவான பசனைக்கோயில்களும், அங்கு சங்கீத கலா சாம்ராட் போல தோற்றத்தில் வலம் வரும் ஆர்மோனியப் பெட்டிக்கார அய்யாவும், தவிலுக்கும், வடநாட்டு டோலக் க்கும் சேராமல் இடையில் ஒருவகையாய் ஒலிக்கும் மிருதங்கமும், அதை வாசிக்கும் மேதைகளும், அவர்பாடும் ஆண்டாளின் திருப்பாவையும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும், இடையிடையே கோவிந்த நாமம் சொல்லும் பஜனைக் கோஷ்டியும், இரவிவர்மாவின் இராமர் பட்டாபிசேகப் படத்துக்கு சூட்டப்பட்டு தெருவரைக்கும் மணக்கும் திருத்துழாய் (துளசி) மாலையும், அதிகாலையில் அங்கே கொடுக்கப்படும் அக்காரஅடிசிலும்(பாலும்-வெல்லமும்-நெய்யும் கலந்த சோறு -சர்க்கரைப்பொங்கல் அல்ல), தேங்காய் சொறுவிப்போட்ட சுண்டலும், விடிவதற்குள் கோலம் போட்டாகவேண்டும் என்ற தவிப்பில் இருக்கும் பெண்களும், அதற்காகவே நடுசாமத்தில் வாசல்கூட்டி வைத்துவிட்டு விடியல் நோக்கிக்காத்திருக்கும் அம்மணிகளும், உழைக்கோள் மீன் கீழ்வானில் தோன்றும் போதே தோட்டத்துக்குப் புறப்பட கைங்கால் மொகங்கழுவிக் கொண்டே உருமாலைக்குத் துண்டும், குளிருக்குக் காப்பி கேட்கும் குடியானவர்களின் ஆணையிடும் சத்தங்களும், காப்பி கொடுத்த தன் இல்லாளை நோக்கி "பால் போகிணிக்கி தனியா சொல்லோணுமேக்கு ?? அதையும் எடுத்தா...."" என்ற மிரட்டும் சலம்பல்களும், புறப்படும்போது "கொஞ்சமாக் கோமயமும், இன்னத்த பால்ப்பூசைக்கி பாலும் தனியாச் சொம்புல கொண்டாந்துருங்க" என்ற அம்மாக்களின் கட்டளைகளும், மார்கழி நீராட்டுக்கும், வெள்ளருகு, வெள்ளெருக்கு, அருகு, செம்பருத்தி, நந்தியாவட்டை, செவ்வரளி மாலைகளுக்கும், அவரின் அம்மாவைப்போல அழகான பொண்ணுக்கும் ஊர்த் தலைவாசலில் (நல்லதும், கெட்டதும் கடந்து செல்லும் இடம்) இருக்கும் அரசமரத்தடியில் கிழக்கு பார்த்து அமர்ந்து காத்துக் கொண்டிருக்கும் பிள்ளையார்களும், மார்கழிப் பட்டத்தில் நெடக்களைக்காய் சால் போடவும், மிச்சமாகும் பிஞ்சு விதைகளை வரும் தை நோம்பிக்கி எண்ணெய் ஆட்டவும் காய் தொழிக்க (நிலக்கடலை தோல்உரித்தல்) பக்கத்து வீடுகளின் திண்ணைகள் வரைக்கும் சாடுகளில் கொண்டு சென்று ஊர் நாயம் ஒலக நாயம் நொப்பமாக பேசிக்கொண்டே விளையாடிக்கொண்டு இருக்கும் எங்களைப்போன்றப் பொட்டு பொடுசுகளிடமும் "அட அம்பூ, சின்னம்மிணி...வாங்க ... சித்தவடம்... ஒரு ரெண்டு வள்ளக் காய்க்கி தொழிச்சு குடுங்கொ...பிஞ்சு வெதைஎல்லாம் நீங்களே எடுத்துக்குவீங்களாமா... வாங்க சாமீ..." என்று வேலை வாங்கும் தாய்களும், அட அம்பு வா... காய் தொழிக்கலாம்... ஆளுக்கு ரெண்டு கை போட்டா அஞ்சே நிமிசத்துல பூராக் காயும் தொழிச்சுப் போடலாம் என்று என்மீது நம்ப பாசமா (வேசம்??!) போட்டுக் கூப்பிடும் பக்கத்து வீட்டு ஆத்தாக்களின் அன்பு வேண்டுதல்களும், தொழிச்ச பெறகு மிஞ்சும் தொல்லிகளை (தோல்) பொரிக்கா செட்டியாரம்மாவுக்கு பொரிக்கு பண்ட மாற்றாய் கொடுத்துவிடுவதும், மஞ்சளும், பச்சையும் கலந்த ஒயர்களில் இணைக்கப்பட்டு காரை வாசலில் நிறுத்தப்பட்ட மரக்கம்பையில் ஒளிரும் குண்டு பல்பின் மஞ்சள் வெளிச்சத்தில் பொங்கலுக்காக ஒயில் கும்மிப்பயிற்சி பெறும் காளையர்களின் பெருஞ்சலங்கை நாதங்களும், மாரியம்மன் கோயில் மணல்பரப்பில் கிழக்கிலிருந்து கூட்டிவந்திருக்கும் தேவராட்ட வாத்தியார் உருமி மேளம் வாசிக்க பொங்கல் பூநோம்புக்காக உருமியாட்டம் பயிலும் இளையர்கள் என்று எங்கு பார்த்தாலும் கலையும், இசையும், தமிழும், கடமையும் என்று எம்மக்கள் மார்கழியில் கற்பித்தவைகள் ஏராளம். காலை என்ற பொழுதுக்கு நேரமே எழுதல் என்ற ஒழுக்க நெறியும், நீராடுதல் மற்றும் இறைக்கு நீராட்டுதல் என்ற பண்பாட்டு நெறிகளையும் சொல்லும் விதமாய் இருந்தது எங்களின் பால்யகாலத்து மார்கழிகள்.

நான் பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஆண்டின் மார்கழி மாதம். பக்கத்து வீட்டில் இருந்த ஆறாத்தக்காள் தான் இன்றைய கதைநாயகி. ஒல்லியாக இருப்பார். முடி அதிகம் இல்லையென்றாலும் நேர்த்தியாக சவுரி வைத்து சீவி கோடாலி போடாமல் உருண்டைக்கொண்டை போட்டு வலையும் போட்டிருப்பார். வடிகட்டிய டீத்தூளையும், சின்னவெங்காயச் சருகையும் அவர் வீட்டு ரோசாச் செடிக்குப் போடுவதால்தான் அடர் சிவப்பில் பூ வெடிக்கிறது என்று ஆழமாய் நம்பி சில சமயங்களில் குடிக்கிற காப்பியும் கூட சேர்த்து செடிக்கு ஊற்றிவிடுவதுண்டு. வீட்டுக்காரர் எங்கேயோ ஒரு பெரும் பணக்காரர் வீட்டில் சமையல் வேலை செய்கிறார் என்று பலர் சொல்லக் கேட்டதுண்டு. ஓரிருமுறை அவரைப் பார்த்திருக்கிறேன். புது நெல்லு புது நாத்து சீலை முன் கொசுவம் வைத்து நேர்த்தியாக எப்பவும் உடுத்தியிருப்பார். கொங்கு மக்கள் மூன்று விதமாய் சேலை கட்டுவதுண்டு. அறுபது நூல் (ஆறு கசம் (கஜம்)), எம்பது நூல் (எட்டுகசம்) புட்டாப் போட்ட சேலைகளை (நல்ல கனமாக இருக்கும்) முழுமையாகப்பின் கொசுவம் வைத்தும், கனம் குறைந்த நூல் சேலைகள்-கண்டாங்கி முறையில் மிகக்குறைவான கொசுவம் வைத்தும், பார்ப்பதற்கு முன்கொசுவம் வைத்திருப்பது போலத்தெரியும் வகையிலும், முழுவதுமாகவே முன்கொசுவம் வைத்தும் கட்டியிருப்பார்கள். ஆனால் மூன்று வகைக் சேலைக்கட்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும் அது இடப்பக்கமாய் தோளில் போட்ட முந்தானையை வலப்பக்கத்தில் கொண்டுவந்து வயிற்றை மறைத்து அதன் இடப்பக்கத்தில் (மடிகட்டுவது போல்) செருகிக்கொள்வதுதான். வயிறு தெரிந்தாலே தம் மானத்துக்குப் பங்கம் வந்துவிட்டதாக நினைக்கும் மகராசிகள்.

நெற்றியில் திருநீற்றுக்குப் பதில் சந்தனம் துலங்கினால் அன்றைக்கு வெள்ளிக்கிழமை என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும். சீலைக்கு தகுந்த இரவிக்கையும் போட்டிருப்பார். ஆறாத்தக்கா...சீல புதுசா? இது என்ன வெல? என்று யாரேனும் கேட்டுவிட்டால் போதும் பூரித்துப்போவார். கேட்டவுங்களுக்கு காப்பி கன்பார்ம். அதான் மேக்க ஆனமல செட்டியார் கொண்ட்டுவந்தது... நூத்தம்பதுதே...ன்... நல்லா இருக்குதா என்று கல்யாணத்து ஊட்டுல பொண்ணுப் புள்ளைய போட்டோக்கார் திலும்பி திலும்பி நிக்கச் சொல்லும்போது புள்ள சும்மா எட்டுக்குப் பத்துத்தடவ திலும்பி நின்னு சீலையையும் மூஞ்சியையும் காட்டுமே அதுமாதிரி காட்டுவார். அதோட மட்டுமில்ல கேட்டவுங்களோட சீலையையும் புடிச்சுப்பாத்து இதும்மு நல்லாத்தான இருக்குது...இதெங்கெடுத்தது? புள்ளாச்சில்லீயா?? என்று கேட்டுக்கொண்டே இடங்கால் மடக்கி வலங்கால் கீழ்வைத்து பாம்பணைந்த உடுக்கையும், பாசாங்குசமும், குறுவாளும், கபாலமும் கையிலேந்தி உக்காந்திருப்பாளே மழைக்காரி மாரி... அவளைப்போல கொசுவம் விரிந்த நிலையில் சேலையை ஒதுக்கி உட்கார்ந்துகொண்டு...ஒரு கெலாசு காப்பி போடறேன் குடிச்சுட்டு போ..ன்னு சொல்லுவார். சீலையப்பத்தி கேக்கற பொம்பளைக காப்பிக்கித் தான பாட்டு படிக்கிறதுன்னு ஆறாத்தக்காளுக்குத் தெரிவதில்லை. அவரைப் பொறுத்தவரை தன் சீலையும் ரவுக்கையும் நல்லா இருக்குதுன்னு சொல்றவுங்க எல்லாருமே நல்லவுங்கதான். காப்பி வெய்க்க வெய்க்க உன்ர சாக்கிட்டு நல்லா “பரு பரு” ன்னு இருக்குது.. புளுவாயிலா.. பாலீஸ்ட்ரா?? உடனே காப்பிக் பாட்டெழுதிய புலவிகள் அய்யோ இல்லீக்கா... இது அம்பர் பாலீஸ்ட்ரு... என்று காப்பி கொதித்து விட்டதா என்று எட்டிப்பாத்துக் கொண்டே சொல்வார்கள். உடனே ஆறாத்தக்கா ரவிக்கையின் கைப்பக்கத்தில் ஒருவிரலை உள்வைத்துகாட்டிய படி “எழுபது பாயிண்ட்டில புளுவாயில்துணி எடுத்து சாக்கிட் தெய்க்கரதுக்கு இந்தக் கொத்தவரங்காயன் டெய்லரு (ஒல்லியாக இருப்பார் டெய்லர்) கிட்டத்தான் தெக்கக் குடுத்திருந்தேன். அளவு சாக்கிட்டுக் குடுத்திருந்தும் கைய கொஞ்சம் எறக்கமா வெச்சு தெய்க்காம மேல தூக்கி வெச்சு தெச்சுபோட்டான் கட்டித்தின்னி... என்று திட்டிக்கொண்டே காப்பி குடுப்பார் (அவர் வீட்டுக்காரர் கொண்டுவந்த காப்பிப்பொடி நல்லா நொப்பமா இருக்கும்ங்கற நப்பாசையில்தான் இந்த சீலைப்பாட்டுகள் அரங்கேறும்!!).
மூன்று அங்கணத்தில் சிறு வீடுதான். பக்கத்தில் சமையலுக்குக் கொட்டம் இருந்தது. நிறைய சிலுவர் பாத்திரங்கள் வைத்திருப்பார். ஒரே ஒரு பீரோவும் இருக்கும். மல்லிகைப்பூ காலங்களில் கோர்த்த மல்லிகைபூ செண்டை அரைமணிநேரம் பீர்வாக்குள் வைத்து மணம் பரப்புவார். பின்னர் எடுத்து குடி தண்ணீர் சால்ப்பானை மேலிருக்கும் தட்டத்தில் வைத்து வெள்ளைத்துணி கொண்டு மூடி விடுவார். புட்டுக்குண்டா, வாணாச்சட்டி, பொங்கத்தவலை, என்று நிறைய பித்தாளை பாத்திரங்கள் உமிச்சாம்பல், உப்பு, புளி போட்டு வெளக்கி செவுத்துப் பலகையில் கமுத்தியிருப்பார். வீடும் திண்ணையும் மஞ்சக் கொளிச்சமாதிரி மாட்டு சாணி போட்டு செவுத்து ஓரத்தில் சாணிப்பாலை துணியில் பிழிஞ்சு சுண்ணாம்பு வெள்ளைக்கு பங்கமில்லாமல் கரைக்கட்டி வளித்து விட்டிருப்பார். ஒருநாள் விட்டு ஒருநாள் பைப்பில் வரும் திருமூர்த்திமலை தண்ணி பிடிக்க முதலில் குடம் வைப்பதும் அவராகத்தான் இருக்கும். பைப் ல "புஸ்....புருச்சுக்..புருச்சுக்" ன்னு சத்தம் வரும்வரைக்கும் அவர் குடங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதாக நானறியேன். பொழுதோட ஏழு மணியானாலும் செரி...வெடியால நாலுமணியானாலும் செரி... அவர்தான் மொதக்கொடம்...வைக்கணும்... தப்பித்தவறி வேற யாராவது வந்து கொடத்த வெச்சுட்டா அவிய கூட வாரக்கணக்குல புட்டுக்கு போட்டுக்குவார்.. (மூஞ்சியை உம்முன்னு வெச்சுக்கறது...  ) கொஞ்சம் ஏமாந்துட்டம்னா என்ர புருசனீங்கூட கூட்டிட்டு போயிருவாளுக ன்னு சாடை வீதி வரை பேசுவார். நாங்க எப்பவுமே ஏழாவது எட்டாவது ஆளா ஓடி கடசி ஆரு? கடசி ஆரு? (எனக்கு முன்னால் வந்தவர் யார் என்று சத்தம் போட்டுக்கேட்கவேண்டும்) ன்னு கேட்டு அப்புறம் தண்ணி புடிச்சுட்டு வருவோம்.

மார்கழிக்கு ஒருவாரம் முன்பிருந்தே தயாராவார். ஏனம்பு அந்தக் கோலப்புடிக்காரன பாத்தயா?? என்று என்னிடம் கேப்பார். அவர் போடும் கோலங்களிலும் பலவகை உண்டு. அதில் நேர்புள்ளி (8 புள்ளி 8 வரிசை), இடைப்புள்ளிகள் (16 புள்ளிகள் முதல் 8 வரை இடையிடையே புள்ளிகள்) என்று பல வடிவங்களில் புள்ளிகளை இணைத்தோ அல்லது புள்ளிகளை சுற்றியோ (நெளிக்கோலம்) கோலங்கள் அவர் வாசலில் மிளிரும்.
நானும் செரியான பக்திப் பழமாத்தான் இருப்பேன். பக்திக்கு ஊன்றுகோலாய் இருந்த என் ஆத்தாவுக்கே சில நேரங்களில் பிடிக்காது என் அளவுகடந்த பக்தியும், வழிபாடுகளும், வாரக்கணக்கில் உண்ணாவிரதங்களும் (சித்திரை முருகனுக்கு மாலை, ஆவணி ஞாயிற்றுக்கிழமைகள் விரதமிருந்து வாரம் தவறாமல் திருமூர்த்திமலை பயணம், புரட்டாசி சனிக்கிழமைகள்-ஏழுமலையான் கோயில், ஐப்பசி ஏழு நாட்கள் சஷ்டிக்கு உண்ணாவிரதம், கார்த்திகை திங்கள்கிழமைகள், மார்கழி (சொல்லப் போகிறேனே.. ), மாசி-சிவராத்திரி) என்று ஆண்டின் பல நாட்கள் நான்செய்த பக்தி அட்டகாசத்தால் எல்லாரும் பயந்து எங்கே சாமியாராய்ப் போய்விடுவேனோ கிலியில் இருந்தார்கள். இதுபோக பக்கத்து ஊர்களில் நோம்பு சாட்டியிருந்தால் சாமி அழைக்க அடியேனைக் கூப்பிடுவார்கள். எங்கள் ஊர் தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தில் காமாட்சிக்கு நோம்பு சாட்டினால் முதல் அழைப்பும் முதல் திருநீறும் எனக்குத்தான் கிடைக்கும். எல்லோரும் எம்மக்கள். மாற்று மதத்தைச்சார்ந்த எல்லோரையும் மதிக்கும் மாண்பும், அவர்களை பட்டிப்பொங்கலுக்கு அழைத்து விருந்து கொடுத்து மகிழ்வார்கள். சரி கதைக்கு வருவோம்...

மார்கழி அப்படின்னாலே நீராடிவிட்டு இறைக்கு நீராட்டுதல் என்ற பண்பாடுதான் எனக்குத்தோன்றும். சீலை, கோலம், வீடு-வாசல் சுத்தம், சுய அலங்காரம், பைப் தண்ணி என்று சகலத்திலும் தான்தான் முன்னோடியாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஆறாத்தக்கா எங்கள் வளவின் இராணி. அதே போல மார்கழியில் ஆண்டுதோறும் முதன் முதலாக பிள்ளையாருக்கு தண்ணி ஊற்றி அவரின் அன்றைய முதல்வரத்தைப் பெற்றுவிட்டதாக மகிழ்ந்து கிடப்பார். போறவுங்க வாரவுங்க கிட்டயெல்லாம் இன்னக்கி வெநாயனுக்கு தண்ணி ஊத்துனையா??? நானு நாலுமணிக்கெல்லாம் மொதத்தண்ணி ஊத்திட்டு வந்துட்டேன் என்று பெருமை சொல்வார். பக்திப்பழம் நான் மட்டும் என்ன சும்மாவா? இந்த வருசம் எப்பிடியும் நாம்தான் விநாயகனுக்கு தண்ணி ஊத்திரணும்ங்கற வெறியில இருந்தேன். பொழுதோடவே பித்தாளை தீர்த்தச்சொம்பு தயார். நிறைகுடத்திலிருந்து தீர்த்தக்குடத்துக்கு தண்ணீரும் நடுராத்திரியில் மாத்தி ரெடியா வெச்சாச்சு. ஆத்தா வீட்டுக்குள் தண்ணி அடுப்பில் ஓலையும், பாளையும் வெச்சு வெச்சுட்டு படுக்கப்போற போது மணி பன்னெண்டு. பனியில படுக்காத என்று அம்மா சொல்லச் சொல்லக் கேக்காமல் ஒரு சரட்டின் ஒரு முனையைக் கையில் கட்டிக்கொண்டு மறுமுனையை திண்ணையில் உள்ள கூசத்தில் கட்டிவிட்டு (அலாரம் இல்லை-திரும்பிப் படுக்கும்போது கயிறு இழுத்து நம்மை எழுப்பிவிடும் என்பதால்) படுத்துக்கொண்டேன். நம் வீட்டைப்பற்றித்தான் ஏற்கெனெவே சொல்லியிருக்கிறேனே. வாசலும் வீதியும் கிட்டத்தட்ட ஒன்று என்று. வெடியால யாரோ எழுப்புவதுபோல் இருந்தது. ஆறாத்தக்காளேதான். அட இதென்ன “அம்ம்பு” உன்னாமு எந்திரிக்கிலியா?? மார்கிழி ஒண்ணாந்தேதி வெநாயனுக்கு தண்ணி ஊத்தப் போகுலியேக்கு?? என்றார். ஊர்ல இருக்கற எல்லாரும் நம்ம ஊட்டு வழியாத்தான் வெடியால வெளிய போரக்கு வருவாங்க. அப்படி போறபோதுதான் நான் திண்ணையில தூங்கரதப்பாத்துட்டு அம்மாகிட்ட கேட்டிருக்கிறார். நான் அடிச்சுப்புடிச்சு எந்திருச்சுப் பாத்தால் மணி ஆறரை. கையில் கட்டியிருந்த சரடு துண்டம் போடப்பட்டு நூல்கவுத்துல நாய்க்குட்டியக் கட்டிவெச்சா எப்பிடி கடி கடின்னு கடிச்சு துண்டம் போடுமோ அதுபோல திரிசல் வெலகி என்னை ஒரு நாய்க்குட்டி போல காட்டியது. அன்னைக்கும் ஆறாத்தக்காள் தான் வெற்றியாளர். என்னைத் தூக்கப்பேய் புடிச்சதால் எனக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. இன்றைக்கு ஆறாத்தக்கா வேறு ஊருக்குக் குடிபோயிட்டதா சொன்னார்கள். இப்போதும் மார்கழி மணக்கிறதா?? தெரியவில்லை...
(பி.கு.: துண்டம் போட்டது வேற ஆருமில்லீங்க.. என் பிறவி எதிரி ஆத்தா தான்.. நடுசாமத்துல எனக்குத் தெரியாம கம்பரக்கத்தி வெச்சு சரட்ட அறுத்துட்டதுமில்லாம வேற ஒரு கனமான கம்பிளியையும் எனக்கு போத்திவிட்டுட்டு கமுக்கமாப்போய் படுத்துக்கிட்டாங்க. மார்கழிக் குளிருக்கு கம்பிளி நல்ல கதகதப்பாய் இருந்ததால் நானும் வாயைத் தொறந்து தூங்கிட்டேன். அப்புறம் என்ன ஏறுகால் வெயிலில் தண்ணியக் கொண்டுட்டு கோயிலுக்கு ஓடினேன்.)

இதோ இன்றைய நீராடுதல் பற்றிச் சொல்லும் ஆண்டாளின் திருப்பாவையில் முதல் பாசுரம். நாட்டை இராகத்தில் (பிள்ளையார் பாடல்கள் பெரும்பாலும் இந்த இராகத்தில் தான் இருக்கும்)

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

(பொருள்: "அழகிய ஆபரணங்களை அணிந்த கன்னிப் பெண்களே! வளமும் சிறப்பும் மிக்க ஆயர்பாடியில் உள்ள செல்வச் சிறுமியரே! மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில், முழு நிலவு வீசும் பௌர்ணமி நன்னாளில், பாவை நோன்பில் கலந்து கொண்டு நீராட விரும்புகின்றவர்கள், வாருங்கள், போகலாம்! கூர்மையான வேலையுடைய நந்தகோபனுடைய குமாரனும், யசோதைக்கு இளம் சிங்கக்குட்டி போன்றவனும், கரிய மேனியும், செந்தாமரைக் கண்களையும், ஒளிர்கின்ற நிலவைப்போல குளிர்ந்ததாயும் உள்ள திருமுகத்தையும், உடையவனும், ஆன நாராயணன், நம் நோன்புக்கு வேண்டிய பொருட்களையும், நாம் விரும்பிய வரங்களையும் தந்து அருள் புரிவான். எனவே உலகத்தார் நம்மை போற்றும் வண்ணம், நோன்பிருந்து அவன் திருவடி பணிவோம், வாருங்கள்!")