வியாழன், 23 அக்டோபர், 2014

தண்ணீரை எண்ணையாக்கிய கதை தொடர்ச்சி.....


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (குறள் 435)

என்பார் வள்ளுவர். அதுபோல பொழுதோட அம்மாகிட்ட விழுகும் அடிய வாங்கும் முன்னே  ஏதாவது செஞ்சு தப்பிச்சுக்கடா தம்பி....ன்னு மனசு சொல்லிச்சு... அம்மாவுக்கு நாம பண்றது தப்புன்னு தெரிஞ்சுது அவ்வளவுதான்... தெவரை வெளார் எடுத்தா பிஞ்சு போகுற அளவுக்கு நிறுத்த மாட்டார்  மகராசி. நெம்ப கண்டுசனாத்தான் எப்பவுமே இருப்பார். நல்ல நேரமாப் போச்சு... செலுப்பிளிருந்த வெளிச்செண்ணை (தேங்காய் எண்ணெய்) பாட்டில் பூனையால் தள்ளிவிடப்பட்டு கீழே உழுந்ததில் வாப்பாடு மட்டும்தான் (மேல்பகுதி) மூடியோடு சேர்ந்து ஒடஞ்சு கெடந்தது. அதில் இருந்த காலிட்டர் எண்ணையில் பாதியளவு சிந்தி வேறபோயிருச்சே..நான் என்ன பண்ணுவன் சாமீ கருப்பராயா காப்பாத்து என்னைய. நான் என்னதான் செய்வன்னே தெரியலையே...


 நம்ம உடன்பிறப்பு ஒண்ணுமே தெரியாதவானாட்டம் பைகெட்ட எடுத்துகிட்டு பள்ளிகோடத்துக்கு நடந்தே கெளம்பிட்டான். அண்ணனுக்கு அடி விழுகுதுன்னா அடுத்த நிமிசத்துல அவன ஆண்டியுர்ல போய்ப் பாக்கலாம்...அப்படி ஒருதடவ எருமைக்கு தவுடு கலக்கும் ஈயக் குண்டாவ வேணும்னே கல்ல மேலபோட்டு ஒடுக்க அதப் பாத்துட்டு அம்மா  இதா வாரன்...நிமிசத்துல வந்திட்டேன் (இரு வருகிறேன்), எதுக்கு தவுட்டுக் குண்டாவ ஒடுக்குண? உன்னைய உறிச்சு உப்பத் தொடவினாத்தான் நீ சொன்னபடி கேப்ப... ன்னு மெரட்டுனவுடனே ஓடுனவுந்தான் எங்க போனான்னே தெரியாம கடசியா ஆண்டியூர் பக்கம் குண்டு வெளையாடுறான்னு தகவல் கெடச்சுது. நாங்க தேடிட்டு போறத தெரிஞ்சுக்கிட்டு வாய்க்கால் மேட்டுல இருக்கற "ஒட்டஞ்செடி" க்குள்ள போய் படுத்துகிட்டான். ஆண்டியுர்ல பலபேரு சைக்கிள் வெச்சுகிட்டு வந்து கூடவே தேடுனாங்க. அட யாரக் காணோம்கூடுதொர பையனக் காணமாமா அக்கோவ் !! அடீ... அம்பக் காணமா? அறிவக்காணமா (கூடுதொரக் கவண்டருக்கு அன்புச்செல்வன், அறிவுச்செல்வன்னு ரெண்டு பசக..  :p )... அம்மிணி இப்பிடி தங்கமாட்டப் பசகளப் பெத்து வளத்தி இன்னக்கி என்ன பேசுன நிய்யி ? கொழந்தைகள? நீ கம்முனே இருக்க மாட்ட லச்சுமி நிய்யி.... என்று அம்மாவையும் கண்டித்தார்கள். நான் ஒண்ணுமே சொல்லுலீங்க அத்தேய்... என்ர பையன காணமுங்க என்று அழுதார்... பொதர் பக்கமா ஸ்டாண்டப் போட்டு ரெண்டு மூணு சைக்கிள ஒண்ணா நிறுத்தி கையில பெடல் கட்டயப்புடிச்சுகிட்டே பெரகால வீல்சக்கரத்த(!!) சுத்தி டயனமா லைட் அடிச்சும், கூடவே பேட்ரி லைட் அடிச்சும் ஒட்டங்காய் செடிப்பொதரில் ஒளிஞ்சு படுத்திருந்த அறிவுசெல்வத்த (!!!) கண்டு புடிச்சு ...அட மாப்ள ங்கொக் .......ளி... இங்கியா இருக்கற ன்னு சிரிச்சுகிட்டே கையில தூக்கிட்டு வந்தாரு ஆட்டுப் பட்டி வெச்சிருந்த ஆறுச்சாமி மாமன். இதனாலையோ என்னமோ அன்னையில இருந்து அவனுக்கு மட்டும் அடியே விழுகாது. எனக்கு மட்டுமே நேரம் அடிக்கடி கெட்டுப்போகும்.  

வண்ணார் சொன்னபடியா கழுத சொன்னபடியா என்பார்கள். அதுபோல நானா எண்ணெய் பாட்டலா ன்னு நெனச்சுகிட்டு வெளிச்செண்ணெயும் தண்ணி மாதிரித்தான இருக்குது.
அதுக்குள்ளயே தண்ணி ஊத்திக் கலக்கி வெச்சுட்டம்ன்னா அம்மாவுக்கு தேரீவா போகுதுன்னு நெனச்சுகிட்டு..வேற ஒரு ஆர்லிக்ஸ் பாட்டல (அதுவும் அதேமாதிரி இருக்கற) தேடிப் புடிச்சு  அதுல போட்டு வெச்சுருந்த வெள்ள ரவைய ஒரு அமுல் டப்பில கொட்டி வெச்சுட்டு அப்பாவோட டரிக்கி துண்டோட மொனைய திருகுனாப்புல உள்ள விட்டு நல்லா சுத்தமா தொடச்சேன். அப்புறம் சால்பானயில இருந்த தண்ணியக் கெலாசுல மோந்து காலிட்டர் வார அளவுக்கு சூதானமா ஊத்தினேன். நான் என்ன கல்குழியில் தண்ணீரில் விளக்கெரித்துத் தத்துவம் சொன்ன வள்ளலார் பெருமானா? தண்ணிய ஊத்துனவுடன் உடனே கரஞ்சு கொஞ்சமா இருந்த வெளிச்செண்ணெய் திரும்பி வந்துவிட? அய்யோ சாமீ...உள்ள ஊத்துன தண்ணியெல்லாம் மொட்டுளி போட்டுட்டு கொஞ்சமா இருந்த எண்ணையையும் கெடுத்துப் போடுச்சே... என்ர கெரகம்... இன்னிக்கி வட்டி மொதலுமா சேந்து கெடைக்கும். இன்னைக்கி என்னப்பெத்த மகமாயி ஏழு கெடாக் கேப்பாளே.. நான் என்ன பண்ணுவன்... அழுகாச்சு வெடிச்சுகிட்டு வந்துது.

ஒரு வெறி வந்து பாட்டலுக்கு மூடியப்போட்டு சலக்கு சலக்குன்னு ஒரு பத்துத் தரம் மேலயும் கீழையும் ஆட்ட தண்ணி கலங்குனாமாதிரி தெரிஞ்சது... முருகா காப்பாத்திட்டடா மகராசா... ன்னு நெனைக்கறதுக்குள்ள மறுபடியும் தண்ணி கீழ.. எண்ணை மேலவும் வந்திருச்சு... ஒரு பத்து நிமிஷம் ஆட்டினப்புறம் கரிமமும் நீர்மமும் வேதிச்சமநிலை (equilibrium) அடைஞ்சமாதிரி பாட்டில் பூராம் நொரயோட இருந்தது. அப்பாடா...இப்பிடியே ஆடாம அசையாம செலுப்புல கொஞ்சம் உள்ள தள்ளி ஒரு கோட்டுல வெச்சுட்டேன். மணி ஏழரை ஆகிப்போச்சு...எனக்கும் தான். உன்னா அரமணி நேரத்துல பஸ் வேற வந்திரும் அப்படின்னு வேகவேகமா பல்ல வெளக்கப் போகும்போதுதான் நெனப்பு வந்துது எண்ணை சிந்தின எடத்தத் தொடைக்கவே இல்லைன்னு. சாணி போட்டு வளிச்சிருக்கற தரை மேல சிந்தின  எண்ணை ஒரு மொறத்தகலத்துக்கு எண்ணைப் பசையாகி வடவடன்னு ஆகிக் கெடந்தது. இது எப்பிடியும் அம்மா வந்தவுடன் காமிச்சுக் குடுத்திருமே? என்ன பண்ணலாம்?

அடுத்த ஐடியா.... வீடு, வாசல், மொறம், இராக்கூடை, ஈக்கித்தட்டம், சாடு, சோளம்-கொள்ளு வெதைக்க, நெடக்களைக் காய் சால் போட உதவும் பொட்டிக்கூடை, குப்பை மண்ணு வளிக்க கொரக்கூடை ன்னு எல்லாமே மாட்டுச்சாணியக் கொண்டுதான் அம்மா வளிச்சு (மெழுகி) வெச்சுருப்பாங்க. ஆனா நம்ம காட்டுல மாடு இல்ல. யூக்காலி எருமீக மட்டும்தான். எருமைச்சாணி ஊடு வளிக்கரதுக்கு ஆகாது.
எருமைச்சாணியின் மணம் பற்றி என் முன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.


 ஆபத்துக்கு பாவமுமில்ல, அடிவாங்க தெம்புமில்லைன்னு மனசுல வெச்சுகிட்டு ஓடிப் போயி ஒரு கைநாம்பல் எருமைச்சாணி எடுத்துட்டு வந்து தானே  (அண்ணமார் கதையில உடுக்கையடிச்சுப் பாடும்போது இடையிடையே அந்தக் காட்சியை வசனமாக வருணனை செய்வார்கள்...அதுபோல நெனச்சுகிட்டு இந்தவரியப் படிங்க...) இந்த அம்பு ஆகப்பட்டவர் தானே (ஆமா !!....)  ஆத்தா மகமாயி, ஆயிரங்கண்ணுடையா, நீட்டிய வெரல் கத்தரிக்கும் நீலி, பொறியல் அவரை தான் கொண்டு பொள்ளாச்சி மேவிய பொன்காளியாகப் பட்டவளைத் தான் நினைத்து, அங்கே  வீரமண்டி போட்டுத்தானே (ஆமா !!....) எண்ணை சிந்துன எடத்த எருமச்சாணி கொண்டு வளிச்சாரே  அந்நேரம்....... பம் பம் பம்....

எப்பிடியும் என்னைக் காப்பாத்திப் போடு ஆத்தா...ன்னு சாமியக் கும்பிட்டுகிட்டே பள்ளிக்கூடம் போய்ச்சேர்ந்தேன். அன்னிக்கு சாயங்காலம் பெல் அடிச்சவுடன் இப்படியே எங்காவது போயிரலாமான்னு கூட நெனைச்சேன். ஒருவேள எண்ணைய பாக்காம இருந்தா கேக்குறபோது சொல்லிரலாம். இருந்தாலும் எப்பிடியும் தண்ணி கலங்கிருக்கும். அந்தக் கலக்கு கலக்கி வெச்சிருக்கிறோம். கலங்காம இருக்குமா? சாயந்திரம் சாளை போய் சேரும் வரை பயமாக இருந்தது. அப்படி இப்படின்னு சாளைக்கிட்ட போயாச்சு. அம்மாவக் காணோம். சாளைக்குள் போகறதுக்கு பயம். சும்மா ரெண்டு மூணு தடவ அம்மா அம்மா ன்னு கூப்பிட்டேன். ஏஞ்சாமி...என்ற சத்தம் பொடக்காளியில் இருந்து வந்தது... அடடா...என்ன குளுமையான வார்த்தைடா... எப்பிடியோ எண்ணையும் தண்ணியும் கலங்கிப் போச்சு போல இருக்குதுன்னு நெனச்சுக்கிட்டு பைகெட்ட திண்ணை மேல வெச்சுட்டு கொஞ்சம் தள்ளியிருக்கற ஆட்டாங்கல் மேல உக்காந்தேன் (நண்பர்கள் கவனிக்கவும் நான் வீட்டுக்குள் போகலை... ஏன்னா எங்கம்மா வீட்டுக்குள்ள வெச்சு வாய்கட்டி (சத்தம் வெளிய வராத மாதிரி கும்முறதுல) பூசை பண்றதுல  கில்லாடி..அதுனாலதான்).

அம்மாவும் வந்தார். எப்போதும் போலவே சிரிச்சுகிட்டே ஏஞ்சாமி இங்கியே உக்காந்துகிட்ட...உள்ள வா...பைகெட்ட உள்ள எடுத்து வெய்யி... கைகால் மூஞ்சி கழுவீட்டு வா காப்பி குடுக்கறேன் என்றார். அட...அட...எனக்கு தேன் வந்து காதுல பாஞ்சுது. நல்ல பையனாட்டம் போய் கைகால் மூஞ்சி கழுவீட்டு வந்து திண்ணையில உக்காந்தேன் (இப்பவும் வீட்டுக்குள்ள போகல...) அம்மாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் கூர்ந்து கவனித்தேன். ஒருதட்டத்தில் சின்ன வெங்காயம், புள்ளாச்சி ல இருந்து வாங்கிட்டு வந்த பூந்தி, நெடக்களை முத்து, மோர் மொளகாய் போட்டு வறுத்த பொரியும், ஒரு கெலாசில் வெல்லக் காப்பியும் கொண்டுவந்து கொடுத்தார்கள். எல்லாம் தின்றாகி விட்டது. அடுத்தது என்ன? சாளைக்குள் இருந்து படியில் தலை வளிச்சு அளந்து போட்ட (முக்கால் படி) அரிசியை அரிக்க வாணாச்சட்டியில் போட்டுக்கிட்டு வாசலுக்கு வந்தார். வாசலில் உட்கார்ந்துகொண்டு அரிசியை அரித்துக் கொண்டே சாமீ மேக்கோட்டுல இருக்கற மொடாவுல கொஞ்சம் புளி எடுத்துட்டுவா... ரசத்துக்கு ஊற வெய்க்கணும் என்றார்.

மனசுக்குள் கொஞ்சம் பயம்தான் இருந்தாலும் போகலாம்னு எந்திருச்சேன். பக்கத்துத் தோட்டத்து ஆத்தா லச்சுமீ இன்னக்கி அவரக்காயி என்ன வெலன்னு தூரத்துல நின்னுட்டே கேட்டாங்க. அதனால அந்த ஆத்தா கூட அம்மா பேசி முடிக்கறதுக்குள்ள வந்திடலாம்னு உள்ள போனேன். மொடாவுக்கிட்டப் போயி திரும்பிப் பார்த்தால் வெளிச்சம் இல்லை. என்னவாய் இருக்கும் நெனச்சீங்க... அம்மா தான் உள்ள வந்து கதவ சாத்திகிட்டாங்க.... கலைஞரக் கைது பண்ணும்போது சன் டிவி காரன் விட்ட அதே டயலாக் தான்... சத்தியமா நான்தான் அந்த வார்த்தைக்கு சொந்தக்காரன். அய்யோ கொல்றாங்களே... ஆத்தா வந்து காப்பாத்துங்களே... நண்பர்களே இன்னும் அடியே ஆரம்பிக்கல... எங்க அம்மா அடிக்கு முன்னாடி எப்பவுமே தச தரிசனம் கொடுத்திட்டுத்தான் ஆரம்பமே பண்ணுவாங்க... அவங்க வாய்மேல குச்சிய வெச்சுக் காமிச்சு மூச்சு வாங்கற சத்தம் வரக்கூடாது... ம்ம்ம்...வாய மூடுன்னா... அப்புறம் என்ன ஸ்டார்ட் மீசிக் தான்... கதவுக்கு தாழ் இல்லாததாலும், பக்கத்து தோட்டத்து ஆத்தா வந்து குறுக்காட்டினதுனாலையும் அன்னிக்கு பேரடியிலிருந்து தப்பிச்சுப் பொழச்சு வந்தனப்பா....  அப்புறம்தான் புரிஞ்சது...எண்ணையும் தண்ணியும் ஒன்னாகாதுன்னு ஏன் சொல்றாங்கன்னு....      

  அண்ணன்மார் உடுக்கையடிக் கதை கேட்க விரும்புவோர்
இதை சுட்டலாம்.

 http://www.youtube.com/watch?v=b7I1ze-0lSo&list=PL12CB0266BF8A85A5&index=2
  
பி.கு:  வெளிச்செண்ணெய் தண்ணீர் போல நிறமின்றி இருப்பதற்கு காரணம் இருக்கிறது. தேங்காய்ப் பருப்பின் நிறமும் ஒரு காரணமாய் இருந்தாலும் செக்கில் ஆட்டி எடுக்கும்போது வெளிர் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். இருப்பினும் பன்னீர் போல நிறமின்றி இருக்கவேண்டும் என்று தேங்காய்ப் பருப்பை எண்ணெய் செக்கில் ஆட்டும்போதே நூறு தேங்காய்களுக்கு ஒரு கிலோ மண்டை வெல்லம் அல்லது முக்கால் கிலோ வெள்ளைச்சர்க்கரை, ஒரு லிட்டர் நல்லதண்ணீர் சேர்த்து ஆட்டுவதால்தான் நிறமின்றிக் கிடைக்கிறது. இப்போதெல்லாம் கந்தகம் வைத்துத்தான் தேங்காய்ப் பருப்பைக் காயவைக்கிறார்கள்-கந்தகம் ஒரு நீர் நீக்கி எனவே பருப்பை ஈரப்பதம் அண்டாமலும் விரைவில் உலர்வதர்க்கும் பயன்படுத்தப் படுகிறது என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். கந்தகம் என்றவுடன் எனக்கு கேரளா நினைவுக்கு வருகிறது. கேரள மண் கூட கந்தக பூமி என்று சொல்வார்கள். அதனால் தான் எவ்வளவு மழை பெய்தாலும் அங்கு உக்கிரமாகவே இருக்கும். குளிர்ச்சி என்பது வெளியில் இருந்தாலும் வீட்டிற்குள் வியர்க்கும். கந்தகக் காற்று பசியை அதிகப்படுத்தும் வல்லமை கொண்டது.  அதனால் தான் அதிக நேரம் தாங்கக்கூடிய உணவுப் பொருட்களான  மட்டை அரிசி, நேந்திரம் பழம்... போன்றவற்றை உட்கொள்ளுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.


-நப்பின்னைநந்தன்

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

தண்ணீரை எண்ணையாக்கிய கதை...






நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ந்தது இது. எங்களின் தோட்டத்தில் என் வயதுடைய தென்னைமரங்கள் (என் பிறப்புக்கு வந்த பணத்தில் வாங்கி நட்ட தென்னங்கன்றுகள்) உள்ள தோப்பின் நடுவில் ஒரு கூரை வீடு,   தெற்குப் பார்த்த உள் தாழில்லா ஒற்றைக்கதவு, கிழமேலாக அஞ்சு அங்கண நீளச்சுவர், உள்ளே நடுவீட்டில் ஒரு செவ்வக வடிவிலான மாடாக்குழி, செலவு, கடுகு டப்பி, உப்புச் சாடி, எண்ணெய் ஊற்றி வைத்திருக்கும் ஆர்லிக்ஸ் பாட்டில்கள், இன்னபிற சாமானங்கள் வெச்சுப் பொழங்க என்று செவுத்திலேயே  வடிவமைத்த செலுப்பு, பக்கத்திலேயே அம்மத்தா அம்மாவுக்குக் குடுத்த தண்ணி தவலை வைக்க பழங்காலத்துச் சாலாணி, பக்கத்திலேயே பாலும், தயிரும் வைக்க ஒரு மணிக்கவுத்தில் செஞ்ச உரி, நட்டடுப்பிலிருந்து கோட்டடுப்பு வரை வேகமாகத்  தீப்பாயும் அங்கலக்குறிச்சி அடுப்பு, அந்த அடுப்பின் புகை வெளியே போக தென் வடல் சுவற்றில் இரண்டு பெருந்துளைகள் அவற்றில் தண்ணி மடைகளின் நட்டுகள், ஆணிகள், டீசல் எஞ்சினின் சொழட்டி, அப்பாவின் சிகரெட் மிச்சங்கள், என்றைக்கு தேடினாலும் கிடைக்கும் தீப்பெட்டிகள் (தீப்பெட்டி சுரபியோவென பலமுறை வியந்திருக்கிறேன்-அது அப்பாவின் கைவண்ணம் என்று பின்னர்தான் புரிந்தது), ஆக்கிய சோத்துச் சட்டிகளை இறக்கி வைக்க குரவமார்கள் செய்துகொடுத்த திரவக்கொடி, புள்ளாச்சி மொறம், சாடுகள், சங்காயம் தூத்த, மொழங்கு தூத்த அளவான  தூத்துக் கூடைகள், கறுது அள்ளிப்போட மக்கிரி,      கூரையையும் , மேல் மூங்கில் வளையையும் தாங்க நிறுத்தியிருக்கும் இரு கூசங்களில் ஒன்றில் தயிர் சிலுப்ப நிரந்தரமாக வைத்திருக்கும் பனை நாரில் ஆன சிலுப்பு-தும்பு, அதனுள்ளே நிறுத்தி சிலுப்ப ஆள் வளத்தி மத்து, நெல்லு சோளம் குத்தவென்று ஒரு முனையில் ஆழக்குழியுள்ள பூனும், மறுமுனையில் மாவு இடிக்கவென்று  சிறுகுழியோடு பூன் போட்ட ரக்கையும் (உலக்கை), சாளையின் மேக்கோட்டில் புளி, கம்பு, கூப்பன் கடையில் வாங்கிய கோதுமை, பள்ளபாளையத்தில் (அம்மா பிறந்த ஊர்) இருந்து கொண்டுவந்த பழையவெல்லம் போட்டுவைத்து அடுக்கி வைத்திருக்கும் பழைய மண் மொடாக்கள், அம்மாவுக்கு சீராய்க்கொடுத்த ஒரு ரங்குப்பெட்டி (ட்ரன்க் பெட்டி), பருத்தி போட்ட பணத்திலும், மாத தவணைக்கும் வாங்கிய ஒரு லொடலொட பீர்வா, எவரடி பேட்டரியில் இயங்கும் ஒரு முள் முறிந்த "தக்காய்" ரேடியோ பெட்டி, அம்மாவும் அப்பாவும் "வேறயா" வந்தபிறகு வந்த  கலியாண, காதுகுத்து பத்திரிக்கைகளை உள்ளடக்கியும், வரப்போகும் பத்திரிக்கைகளை சேர்க்கவும் தயாராக மோட்டுவளை மூங்கிலில் கட்டி வைத்திருக்கும் கம்பி, அப்பாவின் திராவிடமும், அரசியலும், இலக்கியமும் பேசும் காகிதங்கள்,  புத்தகங்கள் நிறைந்த ஒரு இரும்புப் பெட்டி, சுவற்றில் ஒரு "அஜண்டா" ரகக் கடிகாரம், குழிதோண்டவும், இரவில் கதவுக்கு முட்டுக் கொடுக்கவும் இருக்கும் நீண்ட கடப்பாரி, எனக்கும் என் தம்பிக்கும் மட்டும் எட்டாத சுவர், அதன் மேலே வைத்திருக்கும் சிலுவர் பாத்திரங்கள், இய்யச்சட்டிகள், கெலாசுகள், கறிக்குழம்பு முதல் எருமைக்கு அம்பிளி வரை காய்ச்சப் பயன்படுத்தும் புட்டுப் பாத்திரம், மேலே ஓலை மொகுட்டில் சொருகியிருக்கும் வடதிலுப்பி, அம்மாவின்  மைகோதி, பட்டி நோம்பு அன்று மட்டும் பயன்படும் இரட்டை மைகோதி, மூணு அகப்பை, சம்பல் தேவைகளின் போது மட்டும்  பயன்படுத்தும் அன்னவாரிக் கரண்டி, சாம்பிராணி புகை போடவும், நெய் வேவிக்கவும், கேளான் குழம்பு காய்ச்சவும் பயன்படும் இரும்பு வாக்கணம், செலவு வறுத்துக் கொட்டி பாசி, தட்டை, கொள்ளு, தொய்யக்கீரை, நரிப்பயறு கடைய, சில சமயத்தில் அம்மாவால் என்னை அடிக்கவும் பயன்படும் பருப்பாமுட்டி (பருப்பாமுட்டியில் அடிவாங்கி உதடுவீங்கிக் கிடந்தவன் அடியேன்), கதவுக்கு இருபுறமும் மேலே களைவெட்டும் கொத்துகள், வெங்காயக் காட்டுக்கே உரித்தான அம்புகள் எனப்படும் சிறு கொத்துகள், கருக்கரிவாள்கள், ஆட்டாங்கல்-தென்னைமர சந்தில் வைத்திருக்கும் பெரிய கொடுவாள்,  தேங்காய்க்குலை கட்ட சூட்டிக்கயிறு சுருட்டுகள், உழைக்கோள் தடி, எங்களுக்கென குட்டை மம்முட்டி என்று எல்லாம் நினைவில் இருக்கின்றன.

சாளையின் முன்வாசலில் பூத்துக்குலுங்கும் இரண்டு முல்லைச் செடிகள் (பூ பூக்கும் தருணங்களில் ஒரு கிலோ வரை பூக்கும்-எனவே பெரிய பெரிய சிலுவர் கெலாசுகளில் போட்டுக்கொண்டு ஊருக்குள் போய் "மல்லீப்பூ வாங்கலியோ மல்லீப்பூவேய்" என்று விற்றிருக்கிறேன்), மஞ்சள் செவ்வந்தி, மூன்று நிறங்களில் டேலியா, பொங்கலுக்கென்று மட்டும் வளர்க்கும் செங்கரும்பு, எத்தனை தண்ணி பாய்ச்சாலும் அஞ்சு சீப்புக்கு மேல் காய்க்காத இரசதாளி வாழைமரமும், ஒரு சிறு அரிநெல்லிமரம், அதனடியில் ஒரு தவிட்டுத்தாழி, அஞ்சு குடம் புடிக்கும் ஒரு சிமிட்டித் தொட்டி, ஆட்டாங்கல், பக்கத்துலயே ஒரு ஒல்லு (உரல்) குத்தும் போது  தானியம் தெறிக்காதவாறு அடிப்பாகம் சரியான வட்டத்தில் வெட்டப்பட்ட பழைய இரும்பு வடைக்கல் வைத்தது, நீலத்தால் கரைகட்டி வெள்ளிதோறும் சாணியால் வளிச்ச சுவரொட்டிய திண்ணை, என்னைக்குமே சாணிப்பசுமை மங்காத வாசல், என்னைக்கும் எளனி கொடுக்கிற கெவுளி பாத்திரம் என்னும் செவ்விளநீர் மரம்,   காட்டுக்குள்ள பதிகொண்டிருக்கற கருப்பராயனுக்கு தண்ணியும் தழையும் தவுறாம குடுத்துரோனுமுன்னு ஆத்தா சொன்னதுனால சாமிக்கு மட்டுமென வளர்க்கும் அடுக்குச் செவ்வரளி, நந்தியாவட்டை, தென்னைமரங்களுக்குப் போகும் வாய்க்காலில் இருந்து நாங்கள் வெட்டிய கிளை வாய்க்காலில் செழித்துப் பூக்கும் செம்பருத்தி,  ஆனி, ஆடியில் பாளை தள்ளி ஆவணி புரட்டாசியில் அணில் கடித்து விழுந்த தேங்காய்க் குரும்பைகள் (இளநீருக்கும் முன்வடிவம்-சிறிது துவர்ப்பானாலும் நல்ல சுவையாக இருக்கும்), சித்திரை மாதக் கோடையில் வேலிகள், பள்ளங்களின் கரைகள் என்று எங்கும் நிறைந்து இருக்கும் வேப்பங்காய்களை, வேப்பமுத்துகளை  பொறித்துக் கொண்டாந்து சேர்த்து வைத்த சிமிட்டிப் பை மூட்டைகள், அம்மா எப்போது திண்ணையில் உட்காருவார் என்று பார்த்திருந்து உட்கார்ந்த வேகத்தில் தோளின் இருபுறமும் ஏறி உட்கார்ந்து கொஞ்சும் இரு வெடைக்கோழிகள், என் அப்பாவின் கையால் பிசைபட்ட தயிர் சோற்றுக்காகவே அவரை ரோட்டுக்கு அருகில் சென்று அமர்ந்திருந்து அவரை வரவேற்று சாளைக்குக் கூட்டி வரும் செம்மிப் பூனை என்று எழுத எழுத நினைவில் உதித்துக் கொண்டே இருக்கிறது எனக்கு.

என் அப்பாவின் பாசப் பூனை "மீனா" தான் இந்த கதைக்கு காரணமானவள். ஆண்டுக்கு இரண்டு முறைகள் என்று ஒரு பத்துப் பூனைக்குட்டிகளாவது ஈன்று விடுவாள். அப்பாவைத்தவிர எங்களில் வேறு யாரும் பூனையை அவ்வளவாகக் கண்டுகொள்ளமாட்டோம். பெரும்பாலும் குட்டிகள் கண்விழித்தபிறகு ஊருக்குள் உள்ள வெநாங்கோயிலில் விட்டுவிடுவோம். வேண்டுமென்போர்  வந்து பிடித்து செல்வார்கள். எந்தப் பாத்திரமும் மூடி வைத்திருந்தால் மீனா அதைத் தொடவே தொடமாட்டாள். திறந்த சட்டியாய் இருந்தால் அதற்குள்ளிருக்கும் பாலை அல்லது தயிரை சுவைக்காமல் போகவே போகமாட்டாள்.   அன்றைக்கு வியாழக்கிழமை. அப்பாவும், அம்மாவும் பொள்ளாச்சி சந்தைக்கு நேரமே முதல் பஸ்சுக்கு அவரைக்காய் கொண்டுபோயிருந்தார்கள். நானும் தம்பியும் பள்ளி கிளம்பவேண்டும். அம்மா போகும்போதே பாலைக் காய்ச்சி
"பெரை" ஊத்தி வைக்க சூடு அதிகமாக இருந்ததால்
"கொஞ்சநேரம் கழிச்சு பால் ஆறுன பெறகு பெரை ஊத்தி
வெச்சுரு சாமீ" என்று என்னிடம் சொல்லிவிட்டு சென்றார். அம்மா சாளையில் இல்லாத தைரியத்தில் கொஞ்சம் நேரம் வரைக்கும் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது தலைமாட்டுக்கு பக்கத்திலிருந்து "சலக் சலக்" என்ற சத்தம். வேறு யாருமில்லை மீனாதான் ஆற வைத்திருக்கும் பாலை பதம் பார்த்து அநேகமாய் முழுசாய் குடித்து விட்டிருந்தாள். பெரை ஊத்தி வைக்க சொன்னது அப்போதுதான் எனக்கு நெனப்பு வந்தது. அட சண்டாளப் பூனையே.. "எய்" என்று கனைத்தேன். சற்றும் எதிர்பாராத மீனா பக்கத்தில் இருக்கும் செல்ப்பின் மீது ஏற தவறுதலாய் அங்கே இரண்டு நாட்களுக்கு முன் வாங்கிய வெளிச்செண்ணெய் பாட்டில் மீது குதிக்க அங்கிருந்து தரையில் விழுந்தது. செல்ப்புக்கும் தரைக்கும் உயரம் குறைவு என்பதால் விழுந்ததில் பாதி எண்ணெய் மட்டும் சிந்தவும் நான் போய் அதை நிறுத்தி வைக்கவும் சரியாக இருந்தது. எனக்கோ உயிரே போய்க் கொண்டிருந்தது. எங்கள் இருவரில் யார் தப்பு பண்ணினாலும் எனக்கு மட்டுமே அடி நிறையக் கிடைக்கும். எப்படியும் இன்னைக்கி அடி நிச்சயம். பாலுக்கு பாலும் போச்சு, எண்ணையும் சிந்திப்போச்சு... எல்லாக் குடும்பங்களிலும் வறுமையும் கூடவே பயணித்தது.  கால் லிட்டர் வெளிச்செண்ணெய், அரை லிட்டர் கடலைஎண்ணெய், நூறு மில்லி விளக்கெண்ணெய் இருப்பின் ஒரு மாசத்துக்கு தலைக்கு தேய்க்கவும், சாறு காய்ச்சவும் போதுமானதாக இருக்கும்.

தேவனூர்புதூரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பெரிய வீட்டின் திண்ணைக்கு உடுமலையிலிருந்து இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த எண்ணெய்காரர்கள் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் வருவார்கள். பெரும்பாலான மக்களின் எண்ணெய்த்தேவைகளை பூர்த்தி செய்வதும், ஆர்லிக்ஸ் பாட்டில் நிறைய ஊற்றிக் கொடுத்து அரை லிட்டருக்கான பணம் பெறுவதாலும், மளிகைக் கடைகளில் அளந்து ஊற்றும்போது பாட்டிலின் முக்கால் பாகம் மட்டுமே இருக்கும் என்பதாலும், இல்லாதவருக்கு கடனுக்கு எண்ணெய் கொடுப்பதாலும் அவர்கள் வியாபாரம் செழித்திருந்தது. எல்லாருமே "எண்ணக்காரங்க கிட்ட வாங்கி நோம்பிக்கி முறுக்கு சுட்டம்னா எண்ணை பொங்காது அம்மணியோவ்" என்று பேசிக்கொள்வதும் வழக்கமாய் இருந்தது. "அதயேங்கேக்குற அந்த கெழக்காலக் கடக்காரங்கிட்ட எண்ணைய வாங்கி முறுக்கே சுட முடீல அம்முணி...பொங்கு பொங்குனு பொங்கிபோகுது... அப்பறம் ரெண்டு மூணு கொய்யாத் தழைய போட்டபெறகுதாஞ் செரியாச்சு" என்ற பெண்களின் பேச்சை பொங்கல் சமயத்தில் அதிகமாகக் கேட்கலாம். அப்படி எண்ணெய் என்பது ஒரு அரிய உணவுப்பொருளாக இருந்ததால் எல்லோரும் மிகுந்த சிக்கனத்தொடும்தான் புழங்கினர். பெரும்பாலான தாய்மார்கள் உணவுப் பொருளை சரியாக பயன்படுத்தாத, வீண் செய்கின்ற எல்லோரையும் வெறுத்தார்கள். தம் மக்களாய் இருப்பின் தண்டனை கொடுக்கவும் தயங்கியதில்லை.

சரி நம்ம கதைக்கு வருவோம். உடைந்த பாட்டிலைப் பார்த்தவுடனே எனக்கு பயம், அழுகை சேர்ந்தே வந்தது. உடைந்தது ஏழு மணிக்கு. எட்டு பத்துக்கு பள்ளி செல்ல பேருந்து. கண நேரத்தில் ஒரு அருமையான (எனக்கு மட்டும்) எண்ணம் உதித்தது. அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்...

-நப்பின்னைநந்தன்      



                                      

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

வெயில்மோகிகள்

இலையுதிர்காலம் தொடங்கியாயிற்று
சிறு மழையோடு தழைகளும் சேர்ந்தே பெய்கிறது

ஞாயிற்றின் ஒளியாழியில் நரம்பகலக் கலிங்கம் போர்த்தி கடற்கரையில் இருக்கவே இறைஞ்சுகின்றனர் ஏகாந்தச்சுகிகள்

மஞ்சள் வெயிலில் மல்லாந்த மகத்துவம் பேசும் யாவரும்
கருங்கொண்டலின் கருணையை கொண்டாதுவதில்லை

நீர்த்திவலை மேற்படிலோ தீப்பொறியால் சுட்டார்ப்போல்
ஓடி ஒளிகிறார்கள் ஒவ்வொருவரும் கருங்குடைக்குள்

காகிதக்கப்பலுக்காக கிழிபடாத குழந்தைகளின் புத்தகம்தான்
எத்துணை அழகு என்று சிலாகிக்கிறார்கள் வெயில்மோகிகள்

காலாதி முடிவரையில்
முழுதும் போர்த்திக்கொள்ள,
முகநக நட்கப் பின்னர்
மெல்லமோதி முத்தமிட 

ஏதுவாய் வடிவமைத்த துணிப்பேழைகள் வழியெங்கும் விற்பனைக்கு

கோடை வரட்டும் ஆடை களைவேன் என்று சூளுரைத்துக்
கொண்டே முழுதும்பூண்டு மழையை சபிக்கிறார்கள்

தெருவெங்கும் கேட்கும் முத்தச்சத்தங்களைவிட இவர்கள்
மழைவெறுப்பில் கொட்டும் "உச்" மட்டுமே பெருகிக் கேட்கிறது

பண்டிகைகள் தீர்ந்துபோன வெறுமையில் கைபிசையும்
கூத்துக்காரனின் மனமொத்துக் கிடந்தார்கள் கோடை கொண்டாடியவர்கள்

கோட்டையும் குடிசையும் சந்தனமும் சாக்கடையும் சகலமும்
ஒன்றென்றே கொண்ட மழைக்கு வெயில்மோகிகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

எப்போதும் போல் ஓங்கிப் பெய்து தெய்வமாகிறது மழை

நான் மழைமோகியாகவே இருக்கிறேன் அன்பீந்த அருளென்னும் மழையோடு...