வியாழன், 18 செப்டம்பர், 2014

நானும் எருமைச்சாணியும்....

என் பள்ளிக்காலத்தில் என்னை என் அம்மா அதிகாலையில் (5.30 a.m) எழுப்பிய கணங்கள் இன்னும் நினைவில் இருந்து கொண்டே (பயமுறுத்திக்கொண்டே) என்னை வழி நடத்துகிறது. அப்போது கொடுமையாக தெரிந்தாலும் இன்று இனிமையே... நான் முதல் மகனாதலால் முதலில் "பெரீ சாமீ ...டேய் கண்ணு" ..எந்திரி சாமீ நேரமாச்சல்ல.. என்பார்...எழ வில்லையெனில் அடுத்து "பெரீ கண்ணு "..அப்புறம் "பெரீ தம்பீ ".. அப்புறம் ஒரே டேய்....ய்ய்.. ய்... இந்த சத்தத்தில் பக்கத்து சாளையில் (பக்கத்து தோட்டத்து வீட்டில்) உள்ளவர்கள்கூட எழுந்து விடுவார்கள்...அப்படியும் எழ வில்லையென்றால் என் அம்மா "அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணி பிடர்த்தலை பீடம் ஏறிய மடக்கொடிதான்.."
எழுந்தவுடன் சாந்தமாகிவிடுவார்...சீக்கிரமா பல்லு வெளக்கிட்டு வா காப்பி குடுக்கறேன் என்பார். உமிச்சாம்பலோடு பள்ளம் தேடி சென்று வென்று வந்தபின் 6 மணிக்குள் எருமைப்பால் கலந்த வெல்லக் காப்பி கிடைக்கும். காப்பியை கொடுக்கும்போதே சீக்கிரமா குடிச்சுப் போட்டு போய் அந்த சாணிய அள்ளி வீசிட்டு வந்துரு சாமி... என்பார். அய்யயோ அம்மம்மா சாமீ.... எனக்கு எருமைச் சாணி அள்ளுவதை விட கொடுமை வேறு எதுவுமே இருக்க முடியாது. 10 மாடுகளை வைத்துக் கூட சமாளித்து விடலாம். 10 விசுவு (25 சோளத்தட்டு கற்றைகள் சேர்த்தால் 1 விசுவு என்பது அளவு) சோளத்தட்ட பதினஞ்சு நாளயில மென்னு தின்னு சாணமாப் போட்டுரும் இந்த பழிகார எருமைக. ஒருநாளைக்கு அரை அரைக்குடமா அம்பதுதடவ ஒன்னுக்கு போய்...அப்பாடியோவ் சொல்லவே மூச்சு வாங்குது. இது நடுவுல மேயும்போது பள்ளம்படுகயில சேத்தக் (சேறு) கீனு கண்ணுல கண்டிருச்சு போயி படுத்து மேலுப் பூரா சேறு பூசிக்கிட்டுதான் வெளிய வரும். (எருமைக்கு கருமையான தோல் இருப்பதால் அதிக வெப்பத்திற்கு தாங்காது). அப்புறம் கேக்கவா வேணும்?


  மாட்டுச்சாணத்தை கையில்தான் தொட்டு அள்ளவேண்டும் என்று மற்றவருக்கு சொல்லிக்கொண்டே சாணி அள்ள ஏதுவாக பனங்கைமட்டை (பனைமட்டை) செய்து வைத்திருப்பார்கள். ஆனால் எருமைச்சாணம் மாட்டுச்சாணத்தைப் போல சிறிய குத்தேறிகளாக இருக்காது. ஒரு பெரிய குத்தேரியாய் சில மணிகளுக்கு முன்தின்று சீரணிக்காத சோள மணிகள், வக்கிப்பில் (வைக்கோல்) சிதறல்கள் என (கரும்பச்சை நிறத்தில் ஒரு பிட்சா என்று கூட சொல்லலாம்) ஒவ்வொரு எருமையைச்சுற்றிலும் (எங்களிடம் மூன்று எருமைகள் அதன் கன்றுகள் என்று ஆறு உருப்படிகள்) ஒரு ஏழெட்டு குட்டுகள் கிடக்கும். எல்லாத்தையும் எடுத்து காரச்சட்டியில் அள்ளிபோட்டு குப்பைமேட்டுக்கு சுமக்க வேண்டும். செமக்கும்போது வெடியால (காலையில்) குடிச்ச காப்பி என்ன...அம்மா கொடுத்த தாய்ப்பால் மொதக்கொண்டு ரசமே வந்திரும்...அப்படிக் கனமா இருக்கும்ங்க... இதுல நடுவுல எருமிக நம்ம மேல ஒரே கரிசனமா நாக்க சொளட்டிகிட்டு நக்கும் பாருங்க... எதுக்கு நக்கும் னு நெனைக்கிறீங்க? அதனோட சாணி நாத்தம் அதுவாலையே தாங்க முடியாம நம்மள வேற எடத்துக்கு மாத்தசொல்லி தீனி போடசொல்லித்தான். (அந்த எடத்துலயே தீனி போட்டீங்கனா திங்காதுக). 

எப்படியோ அடுத்த அரைமணி நேரத்தில் அள்ளிகொட்டியவுடன் வேலை முடிஞ்சதுன்னு நெனச்சு நம்பி அம்மாவப் பார்த்தா மகராசி பருத்திக் காட்டுக்குள்ளையோ அல்லது அவரைக் காட்டுக்குள்ளயோ நின்னுகிட்டு வா சாமீ...ஒரே ஒரு மடி பருத்தி அல்லது ஒரே ஒருபை அவரைக்காய் பொறிச்சுப்போட்டு பள்ளிக்கூடம் போயிரு சாமீ...நான் ஒருத்தியும் என்னாரம் (எவ்வளவு நேரம்) பொறிக்கறது?” என்பார். அம்மாவுடன் ஓரிரு நெறை (இருபுறமும் செடிகளுக்கு இடையே செல்லும் வாய்க்கால்) கூடவே சென்று பருத்தியோ ஏதேனும் காய்களோ பறித்துக் கொடுத்துவிட்டுத்தான் 8.10 மணி 33 பேருந்தை (உடுமலை பருத்தியூர்) என் தோட்டசாளைக்கு அருகிலேயே நிறுத்தி ஏறி பள்ளி செல்வேன். TCH, வரலெட்சுமி, LRA மற்றும் மானாவாரிப் பருத்திரகங்கள் என கோவைமாவட்டமே செழித்துக் கிடந்தது.. உடுமலை வட்டம் முழுதும் நூற்பாலைகள் பல்லாயிரக்கணக்கான மக்களை வாழவைத்துக் கொண்டிருந்தன. மார்கழி பனியில் கொத்துக் கொத்தாய் காய்க்கும் கோழி அவரை, பீக்கிங்காய், அரசாணிக்காய், நாட்டு வெண்டை என மக்கள் குழம்பு காய்ச்சி உண்டு சலித்தனர். வருசத்தில் ரெண்டு பட்டம் கடலைக்காய் விளைந்தது. விற்றது போக மீதமுள்ள நிலக்கடலையை காயவைத்து எண்ணெய் ஆட்ட செக்குகள் நிரம்பிய ஆலைகள் ஊர்தோறும் நிரம்பிக் கிடந்தன. மளிகைக்கடை அண்ணாச்சி கடைகளில் எப்போதும் மக்கள் ஏதோ ஒன்றை வாங்கிக் கொண்டிருந்தார்கள். பருத்திக்காட்டு ஓரங்களில் நட்டிருந்த நாட்டுத்துவரை சொந்த பந்தத்துக்கு கொடுத்தனுப்பிய பிறகும் அடுத்த வருடம் துவரம்பருப்பு வரும்வரை மூயாது... (நாட்டுத்துவரை சுத்தம் செய்யும் முறையை இன்னொரு பதிவில் சொல்கிறேன்....). 

பருத்தி முதலான தானியம் வாங்குவதற்கு பெண்கள் முதலான வியாபாரிகள் எங்கும் இருந்தார்கள். காட்டுக்குள் அறுவடை செய்த தானியம் வீடு வந்து சேரும் முன்னே வியாபாரிகள் வந்து விலைபேசுவார்கள்..) பத்து ரூபாய்க்கும் பதினொரு ரூபாய்களுக்கும் இடையே சிலசமயம் வியாபாரிகள் மாறிப்போனதுண்டு. இராத்தலில் (weighing balance) தானிய மூட்டையை மாட்டிவிட்டு நாலாபுறமும் கண்களை சுழலவிட்டபடி (ரொம்ப alert ஆம்-சில வியாபாரிகள் தன் சுண்டுவிரலால் மூட்டையை லேசாக தூக்கினால்கூட ஐந்துஆறு கிலோ குறைவாக இராத்தல் காட்டிவிடும் என்பதற்காக) எங்களின் அம்மாக்கள் அளந்து கொடுத்தார்கள். 


மண், காலநிலை, நீரிருப்பு இவற்றை மையமாகக்கொண்ட, நம் முன்னோர்களின் அனுபவத்தோடு விளைந்த  பாரம்பரிய பலதானிய விவசாயங்கள் வழக்கொழிந்து போய் “வெண்கலப் பூட்டை உடைத்து விலக்குமாரை திருடியது போல”  ரெண்டுக்குரெண்டு அடிக்குழியில் தேங்காயைப் புதைத்துவிட்டு  அதனருகில் தண்ணீருக்காக (வந்தால் மலையாம் போனால் ம.....ம்) ரெண்டாயிரம் அடியில் இன்னொரு குழியை ஆழநோண்டி பத்துநாளுக்குக்கொரு தண்ணிஎன்று பீய்ச்சிப் பாய்ச்சிப்பின் அவ்வப்போது பாளை தள்ளீருச்சா? குரும்பை விழுந்துருச்சா? வண்டு தின்னு போட்டுதா? தொண்ணூறு தேங்காய்கள் காய்த்து விட்டதா வேலையத்தவன் விட்டத்தப் பார்ப்பதுபோல் பாதியாய்ப் பட்டுப்போன மரத்தை அண்ணாந்து பார்த்துப் பார்த்து சலித்துப் போய் சர்க்கரை நோயால் மெள்ளமாக மெல்லப்பட்டு இப்பெல்லாம் நாங்க ஆசுபத்திரிகளில் வெவசாயம் செய்யுறோம். எங்க ஊர்லையே இப்போ பலசரக்குக் கடைகள் வந்தாச்சுங்க... 

எண்ணெய் ஆட்டவும், கடலை உடைக்கவும், நெல்லு குத்தவும் இருந்த ஆலைகள் எல்லாம் எங்க போச்சுன்னே தெரியலீங்க. இப்போவெல்லாம் நாங்க யாரும் நல்லா வெளஞ்ச நெத்துத் தேங்காய் போட்டு வெளிச்செண்ணெய்  ஆட்டிக் கொழம்பு வெச்சு சாப்புடறதில்லீங்க. தேங்காய் ஏவாரிகள் கழிச்சுப் போட்ட கழிகாய்களத்தான் (கூகைக் காய்) (மட்டை கூட எடுக்க முடியாத அளவில் நாரெல்லாம் சுருங்கிக் காய்ந்து கிடக்கும்) கோடாலி கொண்டு பிளந்து காயப்போட்டு பருப்பு எடுத்து ஒருவித வாசமடிக்கும் எண்ணெய் ஆட்டுரோம்ங்க. பொதிபொதியாய்ப் பருத்தியும், மூட்டை மூட்டையாய் நெடக்கலைக் காயும், பை பையாய்க் காய்கறிகளும், வண்டி வண்டியாய்த் தக்காளிப்பழங்களும், சலகை சலகையாய் நெல்லும், விசுவு விசுவாய் சோளத்தட்டும், சாடு சாடாய் தட்டை/பாசிப் பயிறும், படி படியாய் நாட்டு மாட்டுப் பாலும், வெண்ணையும், நெய்யும், தயிரும் அளந்து கொடுத்த நாங்கள் இப்போவெல்லாம் தேங்காய் ஏவாரி வீட்டுக்கு நடையா நடந்து அப்பறம் போன் மேல போன் போட்டாத்தான் (காசு வாங்க அல்ல தேங்காய் போட வரச்சொல்லி) அவரு தேங்காய் போட ஆள் அனுப்புவாருங்க. அவங்களே போட்டு அவங்களே ஆளுக்கு ரெண்டு கைக்காய், நூற்றுக்கு ஒரு லாபக்காய், மற்றும் நல்ல திரண்டதெல்லாம் சேர்த்து எண்ணி எடுத்துக்குவாங்க. தென்னை விவசாயத்துல எங்கேயோ போயிட்டம்னு எல்லாரும் சொல்லுறாங்க. ஆனா நாங்க எங்க போயிக்கிட்டு இருக்கறோம்ங்கரத நீங்கதான் சொல்லனும்ங்க!! தோப்பு வெச்சுருக்கரவங்க மட்டுமே பொழைக்க முடியும்ங்கற நெலமையில இருக்கறோம். இது எங்க போயி நிக்கும்னு தெரியலீங்க. 

5 கருத்துகள்:

  1. நல்லதொரு தொடக்கமுங்க அன்பு.சாணியில் ஆரம்பித்து தேங்காய் வரைக்கும் கொண்டுவந்து தற்கால நிலைமையை கொங்கு வட்டார வழக்கில் சுட்டிக்காட்டி உள்ளீர்கள்.தொடரட்டும் உங்கள் பயணம்.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. கொங்கு வட்டாரம் ஒரு நல்ல விவசாயியை அறிவியலுக்காக தியாகம் செய்துள்ளது. அருமையான பதிவுங்கணா.. இன்னும் நிறைய எதிர்பாக்குறோம்.
    (கரும்பச்சை நிறத்தில் ஒரு பிட்சா என்று கூட சொல்லலாம் - என்ன ஒரு ஒப்பீடு..:-)

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு கண்மணி!
    'எந்த நிலை அடைந்தாலும் வந்த வழி மறவாதே'
    என்பது ஆன்றோர் வாக்கு. தன் அடையாளமாய் மலரும் நினைவுகளாக எழுதி எங்களை மகிழ்வித்திருக்கிறீர்கள். பெத்த பிள்ளையாக இல்லாவிடினும் 'தத்துப் பிள்ளையாக' எண்ணி உங்கள் ரசனைக்காகவும், பண்பிற்காகவும் பெருமிதம் கொள்கிறேன் மகனே!

    பதிலளிநீக்கு