வியாழன், 6 அக்டோபர், 2016

மார்பகப் புற்று....






பதின்ம வயதில் தொடங்கி வயதானப் பெண்கள் யாவரும் அன்றாடம் தம் மார்பகங்களைக் குளிக்கும் நேரத்திலோ அல்லது உறங்கப்போகும் நேரத்திலோத் தம் கைகளால் தடவிப் பார்த்துக் கட்டிகள் ஏதேனும் தென்படுகின்றனவா என்றுத் தற்சோதனை செய்துகொள்வது நலம் பயக்கும். ஏதேனும் கட்டிகள் இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். கட்டிகளில் வலியுள்ள அல்லது வலியற்றவைகள் என்று இரண்டு வகைகள் உண்டு. வலியுள்ளக் கட்டிகளாக இருப்பின் சற்றுத் தாமதமானால் கூட தவறு இருக்க வாய்ப்புக் குறைவு. ஆனால் அதே நேரத்தில் வலியற்றக் கட்டிகள் இருந்தால் காலதாமதமின்றி உடனே மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். மார்புமுனைகள் சிவந்து, சிறு சிறு கொப்புளங்கள் இருந்தாலோ அல்லது தொடும்போது வலித்தாலோ எச்சரிக்கை அவசியம்.

வலியில்லை என்று மருத்துவரைப் பார்க்காத சிலருக்குப் புற்று இருப்பதுக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சற்று முள்குத்துவதுப் போன்று வலிஇருப்பவர்களுக்கு "ஃபைபரோஅடினோமா" என்ற புற்று அல்லாத, வெறும் நார்கள் மற்றும் கொழுப்புகளால் ஆனா திசுக்கட்டியினால் வலி உண்டாகலாம். அதோடு மாதவிடாய் நேரத்தில் வலி அதிகமாகிப் பின்னர் குறையும்.  ஆனாலும் மருத்துவரை அணுகவேண்டியது கட்டாயம். தேவைப்பட்டால் அறுவைச்சிகிச்சையின் மூலம் இந்தத் திசுக்கட்டிகளை நீக்கிக்கொள்ளலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த நோய் குழந்தைகளுக்குப் பால் ஊட்டக் கொடுக்காத இளம் தாய்மார்கள், மார்பக அறுவை சிகிச்சை செய்து (சிலிக்கான் மார்பகங்கள்) உருவத்தை மாற்றுதல் போன்றவற்றாலும் தான் வருகிறது என்று நம்பப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் நம் வீட்டுப் பெண்களுக்கும் இந்த நோய் வருவதை அறிகிறோம். இதற்கான மூலகாரணம் இன்னும் அறியப்படவில்லை என்றேச் சொல்லலாம். சிறுப் புற்றுக்கட்டியாக வளரத்தொடங்கிப் பின் பால் சுரப்பிகள் வழியே உடலின் பல பாகங்களுக்குப் பரவிவிடும். இதுப்போன்ற பேரிடர் ஒன்றிலிருந்து நான் தப்பித்தவனாதலால் எல்லோருக்கும் சொல்லவேண்டியக் கடமையில் இதைச் சொல்கிறேன்.

மார்பகப்புற்று மற்றப் புற்றுநோய்களைப்போலவே முற்றும் வரை அறிகுறிகள் தெரியாமலும் போகலாம்.
ஆரம்ப நிலையில் தெரிந்தால் முழுதும் குணப்படுத்த வாய்ப்புகள் அதிகம்.ஆகவே மேற்சொன்னத் தற்சோதனை முறைதான் வருமுன்னர் காப்பதற்கான வழி!!

"வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.(குறள்-435)"

என்பதை என்றும் மறவாதீர் தாய்க்குலங்களே !!

உங்களால்தான் நாங்கள் இயங்குகிறோம்... இங்கேக் குறிப்பிட்டிருக்கும் சொற்கள் யாரையும் புண்படுத்தாது என்று எண்ணுகிறேன். இதைப் படிக்கின்ற நட்புகள் தம் இல்லங்களில் இருக்கும் பெண்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டுகிறேன். "முருகநாதர் உடனுறைகின்ற "முயங்கு பூண்முலை நாயகி" எல்லோரும் நோயின்றி இருக்க அருளட்டும் !!

என்றும் அன்புடன்,
செ. அன்புச்செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக