வெள்ளி, 14 அக்டோபர், 2016

புரட்டாசிக் கடைசிக்கிழமையும் கொங்குநாடும்!!

அண்மை நாட்களில் ஊரிலிருந்து என்னுடன் அலைபேசும் உறவுகள், நட்புகள் எல்லோரும் நீங்க புரட்டாசி விரதமில்லையா? சனிக்கிழமை கும்பிடலையா என்றுக் கேட்கிறார்கள்.  என் கல்லூரிக் காலம் வரையில் நம் ஊர்ப்புறங்களில் மாதம் தோறும் ஏதாவதொருக் கொண்டாட்டம் இருந்துக்கொண்டே இருக்கும்.
மக்களின் எண்ணமெல்லாம் அடுத்தடுத்த நோம்புகளை, அவற்றை எதிர்கொள்கின்ற முறைகள், அதற்கான செலவினங்கள் யார் யாரை நோம்புக்கு அழைக்கலாம், யாரை அழைக்காமல் விட்டுவிடுவது என்பதுப் பற்றியேதான் இருந்துக்கொண்டு இருக்கும். சித்திரை ஒன்றாம்நாளான சித்திரைக்கனியன்றே பொள்ளாச்சி-உடுமலைப் பக்கமுள்ள ஆற்றோர அல்லது நீர்நிலைகள் இருக்கும் கோவில்களுக்கு ஊரேத் திரண்டுச்சென்றுத் தீர்த்தம் எடுத்துவந்து தம் உள்ளூர் தெய்வங்களை முழுக்காட்டி மழைவரம் கேட்பதிலிருந்துக் கொண்டாட்டங்கள் தொடங்கும். சித்திரையின் பின்னேழு நாட்களும், வைகாசியின் முன்னேழு நாட்களும் கழிவு நாட்களாக (அக்கினி வெயில்) வரையறுக்கப்பட்டு தொலைவிலிருக்கும் மலைக்கோவில்களுக்குத் தீர்த்தக் காவடிகள் கொண்டுசெல்வது மரபாகையால் பழனியில் இந்தக் கழிவுநாட்களில் சிறப்புப் பூசனைகளும், தங்கத்தேரும் நடந்தேறும்.

   சித்திரை மாத நிறைவில் பழனிக்குக் காவடி எடுக்கவென்றுக் கிட்டத்தட்ட ஒருமாதகாலம் பச்சைத் துணியுடுத்தி, வெறுந்தரையில் படுத்துறங்கி விரதமிருந்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து வரும் ஆவணி மாதத்தின் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருமூர்த்திமலைத் தெய்வமானக் கஞ்சிமலையானை நினைத்து விரதமிருந்து, அதிகாலைப் பூசைக்குப் பாலும், அங்கிருக்கும் ஏழைகளுக்கு ஆக்கிப்போட ஏதாவதொரு ஞாயிறில் அரிசியும்-பருப்பும் இன்னபிற பொருட்களும் கொடுத்து விரதம் முடிப்பார்கள் எம்மக்கள். பின்னர் புரட்டாசி வந்துவிடும். கொங்குநாட்டின் தென்மேற்குப் பகுதியான  உடுமலை-பொள்ளாச்சிப் பகுதிகளை இரெட்டியார்கள், நாயக்கர்கள்  பாளையங்களாகக் கோட்டைக் கொத்தளங்களோடு ஆண்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் ஆட்சிக்காலத்தில் எங்கள் ஊர் அண்மையிலிருக்கும் குன்றுகள் தோறும் அழகுதிருமலைராயன் என்றத் திருநாமம் பெற்றப் பெருமாள்கோவில்களை நிறைய உருவாக்கியிருக்கிறார்கள்.  








   புரட்டாசியின் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் மலைமீது இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்றுவந்து ஒருசந்தி முடிப்பது இங்குள்ள பெரும்பாலானவர்களின் வழக்கம். மலைக்கோவில்களில் அன்னதானம் ஒவ்வொருச் சனிக்கிழமையிலும் பெருமாள் திருமேனிகள் கோவிலை வலம்வர மேலேக் கருடனும் வலம்வருவதைக் நிறையமுறைகள் கண்டிருக்கிறேன். கழுத்திலே வெண்குறியோடுக் கோவிலின் கூட்டத்தைக் கீழ் நோக்கியவாறு வானிலே வட்டமிடும் கருடப்பறவையை நான் கண்ணாறக் கண்டுக் கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கும் மேலாகியிருக்கும் என நினைக்கிறேன். இப்போதெல்லாம் கருடன் மட்டுமல்ல, கூட்டம் கூட்டமாகப் பறந்தக் கொக்குகளை, மேய்கின்ற மாடுகளின் உடலில் ஒட்டியிருக்கும் உண்ணிகளைப் பொறுக்கிக் கொத்தியுண்ணும் நாரைகளை, கல்வாழை இலையில் ஆத்தா வைக்கும் பாசிப்பருப்புச் சோற்றுக்காகக் கூரை எரவாரத்தில், தென்னஞ்சோகையில் வரிசைபோட்டு அமர்ந்திருக்கும்  காகங்களை, சமையல் பாத்திரங்களைச் சாம்பல்போட்டுத்  துலக்குவதற்கு முன்னம் மீதமாகியக் காய்கறிகளை, மிளகாய்த் தோலிகளை, ஆங்காங்கு மிஞ்சியிருக்கும் சோற்றுப்பருக்கைகளைத் தேடிக்கொண்டு அம்மாவிற்கு முன்னால் மரத்தடிச் சலதாரிக்கு வந்து நிற்கும் நாகணவாய்புள் எனப்படும் அழுக்குவண்ணாக் குருவிகளை (மைனா), வளர்ந்து நிற்கும் சோளத்தட்டில் கூடுகட்டியிருக்கும் தேன்சிட்டுகளை, பூலாம்புதர்களில் தத்தித்தத்தி ஓடும் செம்பூத்துகளை, மழைநின்ற இரவில் “எடைக்கெடை முக்காத்துட்டு” என்றுத் திரும்பத்திரும்ப வியாபாரம் பேசுவதுபோலச் சேற்றுவளைகளுக்குள்  சத்தமிட்டேச்சலிக்கும்  செட்டியார் தவளைகளை, என்று இளவயதில் நான்கண்டப் பெரும்பாலனவைகளில் இன்றைக்குக் கண்களுக்கேத் தட்டுப்படுவதில்லை. பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் சனிக்கிழமை விரதம் ஒரு முக்கியமான நோன்பாகவே இருந்தது.   பெருமாள் திருவடியிலிருந்துப் பெற்றுவந்திருந்தத் திருத்துழாய் இலைகளோடு இருக்கும் நீரை அருந்திக்கொண்டேப் பொழுது வரைக்கும்,


"செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியோனே  வேங்கடவா நின் கோயில்வாசல்-
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய் கிடத்துனது பவளவாய் காண்பேனே"


என்றுக் குலசேகரப் பாசுரம் பாடிக்கொண்டே விரதம் இருப்பார் ஆத்தா. புரட்டாசியின் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாலையில் நிறைகுடத்து நீர் கொணர்ந்துப் புதிதாகச் சமைத்துக் காகத்துக்கு என எச்சில்படாதப் பிசைந்தச் சோற்றை கல்வாழை இலையில் வைத்து கல்திட்டின் மீது வைக்கும்போது மூன்றுமுறை நீர்விட்டுக் கழுவிவிடுவேன் நான். அதன்பிறகுதான் ஒருசந்தி முடிப்பார். அதுவரைக்கும் நாங்கள் பசியோடுதான் காத்திருப்போம். ஆனால் பச்சைக் கற்பூரமும், திருத்துழாயும் கலந்தத் தீர்த்தம் தான் அன்றைய நாளின் பசியை ஆற்றியிருக்கும். பசி பொறுத்தல் என்பது ஒரு தவம். பச்சைக்கற்பூரம் என்றதும் திருப்பதி பெருமாள் தொடர்பானக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.



 மோவாயில் திருநாமம் !! 

இராமானுசரின் சீடர் அனந்தாழ்வார். இவர் பிறந்தவூர் இப்போதையக் கர்நாடகாவில் இருக்கும் ஆதிரங்கத்துக்குப் பக்கத்தில் திருப்புத்தூர் என்னும் ஊர். தன் குருவான இராமனுசரின் மேல் அளவற்ற அன்பும், மதிப்பும் கொண்டிருந்தவர். ஒருமுறை இராமானுசருக்கு திருமலையிலேத் திருக்குளம் ஒன்றை வெட்டி நீர்நிலையாக உருவாக்கி, அதன்கரையில் நந்தவனம் அமைத்து அதில் கிடைக்கும் மலர்களைக்கொண்டே திருமலையானைப் பூசிக்கவேண்டுமென விரும்பினார். ஆகவேத் தம் மாணாக்கர்களை அழைத்துத் திருமலைக்குப் போகச்சொல்ல அனந்தாழ்வாரைத் தவிர யாருக்குமேப் போகவிரும்பவில்லை. இராமானுசருக்கோ அனந்தாழ்வாரை அனுப்ப விருப்பில்லை. காரணம் அனந்தாழ்வாருக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது. ஆயினும் விடாப்பிடியாக நான்தான் போவேன், துணைக்கு என் குடும்பத்தையும் அழைத்துக்கொண்டேப் போவேன் என்று அடம் செய்து, குருவின் ஒப்புதல் பெற்றுக் குடும்பத்தோடு வந்துப் பணியைத் துவக்கினார். ஐந்தாறு ஆண்டுகளாகின. திருக்குளமும் ஏறக்குறைய முடியும் தருவாய் ஆகிவிட்டது. அப்பொழுது அனந்தாழ்வாரின் மனைவி இன்னொருக் குழந்தையையும் சுமந்துகொண்டு இருந்தார்.


 வைதீக மரபினராக இருந்தாலும் வன்தொண்டர். தான் கடப்பாரையால் மண்ணைக்குத்தி, மண்வெட்டியில் வெட்டிக்கொடுக்க கருவைச் சுமக்கும் மனைவியும், குழந்தையும் கூடைகளில் மண்ணை வாங்கிக் கொண்டுசென்றுக் கொட்டினார்கள். அனந்தாழ்வாரின் தீராத இறையுணர்வும், குருபக்தியும்  இறையை இரங்கவைத்துவிட்டன. வந்தார் பெருமாள் ஒரு கலியாணமில்லாத வயோதிகன் போலத் தோற்றத்தில் வந்து கருவைச்சுமந்தப் பெண் கொண்டு வந்த மண் கூடைகளை ஓடியோடி வாங்கிக் கொணர்ந்துக் கரைகளில் சேர்த்தார். அந்தப்பெண் எவ்வளவு மறுத்தும் விடாப்பிடியாக மண்கூடைகளை வாங்கிக்கொள்ள, மண் வெட்டிக்கொடுக்கும் அனந்தாழ்வார் வேகவேகமாகத் திரும்பும் அதே சமயத்தில் தன்னிடம் ஏதோ சொல்லமுயன்று அச்சத்தால் சொல்லாமல் போவதையும் கண்டு இறும்பூது எய்தியவர் இறுதியாகக் கண்டுபிடித்துவிட்டார். 

கடுஞ்சினத்தின் உச்சியில், என் மனைவிக்கு உதவிசெய்ய நீ யாரடா? அதோடு என் பணியிடைப் புக உனக்கு என்ன உரிமை என்று தாறுமாறாக வாய்ச்சொல் வளர்ந்துக் கைவைத்துக் கொள்ளுமளவுக்குச் சண்டை வலுத்தது. இறுதியாக அனந்தாழ்வார் சொன்னார், நீயாக வந்தவழி போய்விட்டால் சரி..இல்லையென்றால் இதோ என் கையிலிருக்கும் கடப்பாரை பேசவேண்டிவரும் என்று எச்சரிக்க, வயோதிகன் சிரிக்க, இவர் கடப்பாரையில் ஓங்கி ஒன்றுப் போட, அது வயோதிகனின் வாயிற்குக் கீழே மோவாயில் பட்டுக் குருதிக் கொப்பளித்தது. வயோதிகன் சென்றுவிட்டான். அடுத்தநாள் காலையில் கோவில் திறக்கும்போது திருமலையானின் மோவாயிலிருந்து இரத்தம் கசிய, இவர் வந்தது பெருமாளென அறிந்து அழுக, நிறைவாக அங்கே இருந்தப் பச்சைக் கற்பூரத்தை எடுத்துக் காயத்துக்கு மருந்தாக இட்டார். ஆகவேதான் பெருமாளின் முகத்து மோவாயில் வெள்ளையாக இன்றும் பச்சைக் கற்பூரம் சாற்றுகிறார்கள். அனந்தாழ்வார் பயன்படுத்தியக் கடப்பாரை இன்றும் திருப்பதி திருமலைக் கோபுரத்தின் வடபுற மேல்பகுதியில் வைக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். திருப்பதி செல்பவர்கள் தவறாமல் கண்டுவாருங்கள்.      

  புரட்டாசியின் கடைசிக் கிழமை என்றுச் சொல்லப்படும் ஐந்தாம் சனிக்கிழமைக்கு என்றே வீடுகள் வெள்ளையடிக்கப்பட்டு, நீலம் கரைகட்டி, சாணமிட்டு வழித்துச் சுத்தம் செய்வார்கள். கடைசிக்கிழமையன்றுப் பெருமாள் கோவில் சென்று அங்கேப் பாசுரம் பாடியபடி நெய்ப்பந்தம் பிடித்துக் கொண்டிருக்கும் தாசர்கள், வீடுவீடாகச் சென்றுத் தாம் யாசகமாகப்பெற்ற அரிசியிலிருந்து ஒரு நாம்பல், காய்கறித் துண்டுகளை நாம் யாசகமாக அவர்களிடத்தே வாங்கி வீட்டிற்குக் கொணர்ந்து, வீட்டிலிருக்கும் அரிசியோடு சேர்த்து சோறாக்கி, குழம்பு வகைகள் செய்து தலைவாழையிலையில் பரிமாறி இறைக்குப் படைத்து, மாடுகளோடு நின்றிருக்கும் கண்ணன் படத்துக்கோ, திருப்பதிப் பெருமாள் படத்துக்கோ செவ்வந்தி மாலை, சந்தனம்-குங்குமம் துலங்கப் பூசைகள் செய்து வழிபட்டபிறகு, பரிமாறிய இலைகளிலிருந்து காகத்துக்கு என்று எடுத்துவைத்துவிட்டு, தெரிந்தவர் எல்லோரையும்  அழைத்து விருந்துக் கொடுத்து மகிழ்வார்கள் புரட்டாசிக்கிழமை நிறைவாகும். அந்த மாதம் முழுக்க ஊன் உண்ணாமல் இருப்பது ஒரு நிர்மலமான உணர்வைக் கொடுக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.   


1 கருத்து:

  1. நல்ல அருமையான பதிவு அன்பு. புரட்டாசித் திங்களின் சனிக்கிழமை விரதப் பதிவு, சிறு சிறு செய்கைகளையும் சீர்தூக்கிச் செப்பியுள்ளது.

    பதிலளிநீக்கு