வியாழன், 23 அக்டோபர், 2014

தண்ணீரை எண்ணையாக்கிய கதை தொடர்ச்சி.....


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (குறள் 435)

என்பார் வள்ளுவர். அதுபோல பொழுதோட அம்மாகிட்ட விழுகும் அடிய வாங்கும் முன்னே  ஏதாவது செஞ்சு தப்பிச்சுக்கடா தம்பி....ன்னு மனசு சொல்லிச்சு... அம்மாவுக்கு நாம பண்றது தப்புன்னு தெரிஞ்சுது அவ்வளவுதான்... தெவரை வெளார் எடுத்தா பிஞ்சு போகுற அளவுக்கு நிறுத்த மாட்டார்  மகராசி. நெம்ப கண்டுசனாத்தான் எப்பவுமே இருப்பார். நல்ல நேரமாப் போச்சு... செலுப்பிளிருந்த வெளிச்செண்ணை (தேங்காய் எண்ணெய்) பாட்டில் பூனையால் தள்ளிவிடப்பட்டு கீழே உழுந்ததில் வாப்பாடு மட்டும்தான் (மேல்பகுதி) மூடியோடு சேர்ந்து ஒடஞ்சு கெடந்தது. அதில் இருந்த காலிட்டர் எண்ணையில் பாதியளவு சிந்தி வேறபோயிருச்சே..நான் என்ன பண்ணுவன் சாமீ கருப்பராயா காப்பாத்து என்னைய. நான் என்னதான் செய்வன்னே தெரியலையே...


 நம்ம உடன்பிறப்பு ஒண்ணுமே தெரியாதவானாட்டம் பைகெட்ட எடுத்துகிட்டு பள்ளிகோடத்துக்கு நடந்தே கெளம்பிட்டான். அண்ணனுக்கு அடி விழுகுதுன்னா அடுத்த நிமிசத்துல அவன ஆண்டியுர்ல போய்ப் பாக்கலாம்...அப்படி ஒருதடவ எருமைக்கு தவுடு கலக்கும் ஈயக் குண்டாவ வேணும்னே கல்ல மேலபோட்டு ஒடுக்க அதப் பாத்துட்டு அம்மா  இதா வாரன்...நிமிசத்துல வந்திட்டேன் (இரு வருகிறேன்), எதுக்கு தவுட்டுக் குண்டாவ ஒடுக்குண? உன்னைய உறிச்சு உப்பத் தொடவினாத்தான் நீ சொன்னபடி கேப்ப... ன்னு மெரட்டுனவுடனே ஓடுனவுந்தான் எங்க போனான்னே தெரியாம கடசியா ஆண்டியூர் பக்கம் குண்டு வெளையாடுறான்னு தகவல் கெடச்சுது. நாங்க தேடிட்டு போறத தெரிஞ்சுக்கிட்டு வாய்க்கால் மேட்டுல இருக்கற "ஒட்டஞ்செடி" க்குள்ள போய் படுத்துகிட்டான். ஆண்டியுர்ல பலபேரு சைக்கிள் வெச்சுகிட்டு வந்து கூடவே தேடுனாங்க. அட யாரக் காணோம்கூடுதொர பையனக் காணமாமா அக்கோவ் !! அடீ... அம்பக் காணமா? அறிவக்காணமா (கூடுதொரக் கவண்டருக்கு அன்புச்செல்வன், அறிவுச்செல்வன்னு ரெண்டு பசக..  :p )... அம்மிணி இப்பிடி தங்கமாட்டப் பசகளப் பெத்து வளத்தி இன்னக்கி என்ன பேசுன நிய்யி ? கொழந்தைகள? நீ கம்முனே இருக்க மாட்ட லச்சுமி நிய்யி.... என்று அம்மாவையும் கண்டித்தார்கள். நான் ஒண்ணுமே சொல்லுலீங்க அத்தேய்... என்ர பையன காணமுங்க என்று அழுதார்... பொதர் பக்கமா ஸ்டாண்டப் போட்டு ரெண்டு மூணு சைக்கிள ஒண்ணா நிறுத்தி கையில பெடல் கட்டயப்புடிச்சுகிட்டே பெரகால வீல்சக்கரத்த(!!) சுத்தி டயனமா லைட் அடிச்சும், கூடவே பேட்ரி லைட் அடிச்சும் ஒட்டங்காய் செடிப்பொதரில் ஒளிஞ்சு படுத்திருந்த அறிவுசெல்வத்த (!!!) கண்டு புடிச்சு ...அட மாப்ள ங்கொக் .......ளி... இங்கியா இருக்கற ன்னு சிரிச்சுகிட்டே கையில தூக்கிட்டு வந்தாரு ஆட்டுப் பட்டி வெச்சிருந்த ஆறுச்சாமி மாமன். இதனாலையோ என்னமோ அன்னையில இருந்து அவனுக்கு மட்டும் அடியே விழுகாது. எனக்கு மட்டுமே நேரம் அடிக்கடி கெட்டுப்போகும்.  

வண்ணார் சொன்னபடியா கழுத சொன்னபடியா என்பார்கள். அதுபோல நானா எண்ணெய் பாட்டலா ன்னு நெனச்சுகிட்டு வெளிச்செண்ணெயும் தண்ணி மாதிரித்தான இருக்குது.
அதுக்குள்ளயே தண்ணி ஊத்திக் கலக்கி வெச்சுட்டம்ன்னா அம்மாவுக்கு தேரீவா போகுதுன்னு நெனச்சுகிட்டு..வேற ஒரு ஆர்லிக்ஸ் பாட்டல (அதுவும் அதேமாதிரி இருக்கற) தேடிப் புடிச்சு  அதுல போட்டு வெச்சுருந்த வெள்ள ரவைய ஒரு அமுல் டப்பில கொட்டி வெச்சுட்டு அப்பாவோட டரிக்கி துண்டோட மொனைய திருகுனாப்புல உள்ள விட்டு நல்லா சுத்தமா தொடச்சேன். அப்புறம் சால்பானயில இருந்த தண்ணியக் கெலாசுல மோந்து காலிட்டர் வார அளவுக்கு சூதானமா ஊத்தினேன். நான் என்ன கல்குழியில் தண்ணீரில் விளக்கெரித்துத் தத்துவம் சொன்ன வள்ளலார் பெருமானா? தண்ணிய ஊத்துனவுடன் உடனே கரஞ்சு கொஞ்சமா இருந்த வெளிச்செண்ணெய் திரும்பி வந்துவிட? அய்யோ சாமீ...உள்ள ஊத்துன தண்ணியெல்லாம் மொட்டுளி போட்டுட்டு கொஞ்சமா இருந்த எண்ணையையும் கெடுத்துப் போடுச்சே... என்ர கெரகம்... இன்னிக்கி வட்டி மொதலுமா சேந்து கெடைக்கும். இன்னைக்கி என்னப்பெத்த மகமாயி ஏழு கெடாக் கேப்பாளே.. நான் என்ன பண்ணுவன்... அழுகாச்சு வெடிச்சுகிட்டு வந்துது.

ஒரு வெறி வந்து பாட்டலுக்கு மூடியப்போட்டு சலக்கு சலக்குன்னு ஒரு பத்துத் தரம் மேலயும் கீழையும் ஆட்ட தண்ணி கலங்குனாமாதிரி தெரிஞ்சது... முருகா காப்பாத்திட்டடா மகராசா... ன்னு நெனைக்கறதுக்குள்ள மறுபடியும் தண்ணி கீழ.. எண்ணை மேலவும் வந்திருச்சு... ஒரு பத்து நிமிஷம் ஆட்டினப்புறம் கரிமமும் நீர்மமும் வேதிச்சமநிலை (equilibrium) அடைஞ்சமாதிரி பாட்டில் பூராம் நொரயோட இருந்தது. அப்பாடா...இப்பிடியே ஆடாம அசையாம செலுப்புல கொஞ்சம் உள்ள தள்ளி ஒரு கோட்டுல வெச்சுட்டேன். மணி ஏழரை ஆகிப்போச்சு...எனக்கும் தான். உன்னா அரமணி நேரத்துல பஸ் வேற வந்திரும் அப்படின்னு வேகவேகமா பல்ல வெளக்கப் போகும்போதுதான் நெனப்பு வந்துது எண்ணை சிந்தின எடத்தத் தொடைக்கவே இல்லைன்னு. சாணி போட்டு வளிச்சிருக்கற தரை மேல சிந்தின  எண்ணை ஒரு மொறத்தகலத்துக்கு எண்ணைப் பசையாகி வடவடன்னு ஆகிக் கெடந்தது. இது எப்பிடியும் அம்மா வந்தவுடன் காமிச்சுக் குடுத்திருமே? என்ன பண்ணலாம்?

அடுத்த ஐடியா.... வீடு, வாசல், மொறம், இராக்கூடை, ஈக்கித்தட்டம், சாடு, சோளம்-கொள்ளு வெதைக்க, நெடக்களைக் காய் சால் போட உதவும் பொட்டிக்கூடை, குப்பை மண்ணு வளிக்க கொரக்கூடை ன்னு எல்லாமே மாட்டுச்சாணியக் கொண்டுதான் அம்மா வளிச்சு (மெழுகி) வெச்சுருப்பாங்க. ஆனா நம்ம காட்டுல மாடு இல்ல. யூக்காலி எருமீக மட்டும்தான். எருமைச்சாணி ஊடு வளிக்கரதுக்கு ஆகாது.
எருமைச்சாணியின் மணம் பற்றி என் முன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.


 ஆபத்துக்கு பாவமுமில்ல, அடிவாங்க தெம்புமில்லைன்னு மனசுல வெச்சுகிட்டு ஓடிப் போயி ஒரு கைநாம்பல் எருமைச்சாணி எடுத்துட்டு வந்து தானே  (அண்ணமார் கதையில உடுக்கையடிச்சுப் பாடும்போது இடையிடையே அந்தக் காட்சியை வசனமாக வருணனை செய்வார்கள்...அதுபோல நெனச்சுகிட்டு இந்தவரியப் படிங்க...) இந்த அம்பு ஆகப்பட்டவர் தானே (ஆமா !!....)  ஆத்தா மகமாயி, ஆயிரங்கண்ணுடையா, நீட்டிய வெரல் கத்தரிக்கும் நீலி, பொறியல் அவரை தான் கொண்டு பொள்ளாச்சி மேவிய பொன்காளியாகப் பட்டவளைத் தான் நினைத்து, அங்கே  வீரமண்டி போட்டுத்தானே (ஆமா !!....) எண்ணை சிந்துன எடத்த எருமச்சாணி கொண்டு வளிச்சாரே  அந்நேரம்....... பம் பம் பம்....

எப்பிடியும் என்னைக் காப்பாத்திப் போடு ஆத்தா...ன்னு சாமியக் கும்பிட்டுகிட்டே பள்ளிக்கூடம் போய்ச்சேர்ந்தேன். அன்னிக்கு சாயங்காலம் பெல் அடிச்சவுடன் இப்படியே எங்காவது போயிரலாமான்னு கூட நெனைச்சேன். ஒருவேள எண்ணைய பாக்காம இருந்தா கேக்குறபோது சொல்லிரலாம். இருந்தாலும் எப்பிடியும் தண்ணி கலங்கிருக்கும். அந்தக் கலக்கு கலக்கி வெச்சிருக்கிறோம். கலங்காம இருக்குமா? சாயந்திரம் சாளை போய் சேரும் வரை பயமாக இருந்தது. அப்படி இப்படின்னு சாளைக்கிட்ட போயாச்சு. அம்மாவக் காணோம். சாளைக்குள் போகறதுக்கு பயம். சும்மா ரெண்டு மூணு தடவ அம்மா அம்மா ன்னு கூப்பிட்டேன். ஏஞ்சாமி...என்ற சத்தம் பொடக்காளியில் இருந்து வந்தது... அடடா...என்ன குளுமையான வார்த்தைடா... எப்பிடியோ எண்ணையும் தண்ணியும் கலங்கிப் போச்சு போல இருக்குதுன்னு நெனச்சுக்கிட்டு பைகெட்ட திண்ணை மேல வெச்சுட்டு கொஞ்சம் தள்ளியிருக்கற ஆட்டாங்கல் மேல உக்காந்தேன் (நண்பர்கள் கவனிக்கவும் நான் வீட்டுக்குள் போகலை... ஏன்னா எங்கம்மா வீட்டுக்குள்ள வெச்சு வாய்கட்டி (சத்தம் வெளிய வராத மாதிரி கும்முறதுல) பூசை பண்றதுல  கில்லாடி..அதுனாலதான்).

அம்மாவும் வந்தார். எப்போதும் போலவே சிரிச்சுகிட்டே ஏஞ்சாமி இங்கியே உக்காந்துகிட்ட...உள்ள வா...பைகெட்ட உள்ள எடுத்து வெய்யி... கைகால் மூஞ்சி கழுவீட்டு வா காப்பி குடுக்கறேன் என்றார். அட...அட...எனக்கு தேன் வந்து காதுல பாஞ்சுது. நல்ல பையனாட்டம் போய் கைகால் மூஞ்சி கழுவீட்டு வந்து திண்ணையில உக்காந்தேன் (இப்பவும் வீட்டுக்குள்ள போகல...) அம்மாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் கூர்ந்து கவனித்தேன். ஒருதட்டத்தில் சின்ன வெங்காயம், புள்ளாச்சி ல இருந்து வாங்கிட்டு வந்த பூந்தி, நெடக்களை முத்து, மோர் மொளகாய் போட்டு வறுத்த பொரியும், ஒரு கெலாசில் வெல்லக் காப்பியும் கொண்டுவந்து கொடுத்தார்கள். எல்லாம் தின்றாகி விட்டது. அடுத்தது என்ன? சாளைக்குள் இருந்து படியில் தலை வளிச்சு அளந்து போட்ட (முக்கால் படி) அரிசியை அரிக்க வாணாச்சட்டியில் போட்டுக்கிட்டு வாசலுக்கு வந்தார். வாசலில் உட்கார்ந்துகொண்டு அரிசியை அரித்துக் கொண்டே சாமீ மேக்கோட்டுல இருக்கற மொடாவுல கொஞ்சம் புளி எடுத்துட்டுவா... ரசத்துக்கு ஊற வெய்க்கணும் என்றார்.

மனசுக்குள் கொஞ்சம் பயம்தான் இருந்தாலும் போகலாம்னு எந்திருச்சேன். பக்கத்துத் தோட்டத்து ஆத்தா லச்சுமீ இன்னக்கி அவரக்காயி என்ன வெலன்னு தூரத்துல நின்னுட்டே கேட்டாங்க. அதனால அந்த ஆத்தா கூட அம்மா பேசி முடிக்கறதுக்குள்ள வந்திடலாம்னு உள்ள போனேன். மொடாவுக்கிட்டப் போயி திரும்பிப் பார்த்தால் வெளிச்சம் இல்லை. என்னவாய் இருக்கும் நெனச்சீங்க... அம்மா தான் உள்ள வந்து கதவ சாத்திகிட்டாங்க.... கலைஞரக் கைது பண்ணும்போது சன் டிவி காரன் விட்ட அதே டயலாக் தான்... சத்தியமா நான்தான் அந்த வார்த்தைக்கு சொந்தக்காரன். அய்யோ கொல்றாங்களே... ஆத்தா வந்து காப்பாத்துங்களே... நண்பர்களே இன்னும் அடியே ஆரம்பிக்கல... எங்க அம்மா அடிக்கு முன்னாடி எப்பவுமே தச தரிசனம் கொடுத்திட்டுத்தான் ஆரம்பமே பண்ணுவாங்க... அவங்க வாய்மேல குச்சிய வெச்சுக் காமிச்சு மூச்சு வாங்கற சத்தம் வரக்கூடாது... ம்ம்ம்...வாய மூடுன்னா... அப்புறம் என்ன ஸ்டார்ட் மீசிக் தான்... கதவுக்கு தாழ் இல்லாததாலும், பக்கத்து தோட்டத்து ஆத்தா வந்து குறுக்காட்டினதுனாலையும் அன்னிக்கு பேரடியிலிருந்து தப்பிச்சுப் பொழச்சு வந்தனப்பா....  அப்புறம்தான் புரிஞ்சது...எண்ணையும் தண்ணியும் ஒன்னாகாதுன்னு ஏன் சொல்றாங்கன்னு....      

  அண்ணன்மார் உடுக்கையடிக் கதை கேட்க விரும்புவோர்
இதை சுட்டலாம்.

 http://www.youtube.com/watch?v=b7I1ze-0lSo&list=PL12CB0266BF8A85A5&index=2
  
பி.கு:  வெளிச்செண்ணெய் தண்ணீர் போல நிறமின்றி இருப்பதற்கு காரணம் இருக்கிறது. தேங்காய்ப் பருப்பின் நிறமும் ஒரு காரணமாய் இருந்தாலும் செக்கில் ஆட்டி எடுக்கும்போது வெளிர் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். இருப்பினும் பன்னீர் போல நிறமின்றி இருக்கவேண்டும் என்று தேங்காய்ப் பருப்பை எண்ணெய் செக்கில் ஆட்டும்போதே நூறு தேங்காய்களுக்கு ஒரு கிலோ மண்டை வெல்லம் அல்லது முக்கால் கிலோ வெள்ளைச்சர்க்கரை, ஒரு லிட்டர் நல்லதண்ணீர் சேர்த்து ஆட்டுவதால்தான் நிறமின்றிக் கிடைக்கிறது. இப்போதெல்லாம் கந்தகம் வைத்துத்தான் தேங்காய்ப் பருப்பைக் காயவைக்கிறார்கள்-கந்தகம் ஒரு நீர் நீக்கி எனவே பருப்பை ஈரப்பதம் அண்டாமலும் விரைவில் உலர்வதர்க்கும் பயன்படுத்தப் படுகிறது என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். கந்தகம் என்றவுடன் எனக்கு கேரளா நினைவுக்கு வருகிறது. கேரள மண் கூட கந்தக பூமி என்று சொல்வார்கள். அதனால் தான் எவ்வளவு மழை பெய்தாலும் அங்கு உக்கிரமாகவே இருக்கும். குளிர்ச்சி என்பது வெளியில் இருந்தாலும் வீட்டிற்குள் வியர்க்கும். கந்தகக் காற்று பசியை அதிகப்படுத்தும் வல்லமை கொண்டது.  அதனால் தான் அதிக நேரம் தாங்கக்கூடிய உணவுப் பொருட்களான  மட்டை அரிசி, நேந்திரம் பழம்... போன்றவற்றை உட்கொள்ளுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.


-நப்பின்னைநந்தன்

1 கருத்து: